Take a fresh look at your lifestyle.

சவாலான காவல் பணி: தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நன்றி

105

சவாலான காவல் பணியை மெய்வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், இரவு பகலாக ஓய்வின்றி, நீங்கள் பணியாற்றிய விதம் போற்றுதலுக்குரியது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக காவல்துறையினரை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அது தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:–

‘‘தமிழ்நாடு காவல்துறை கடந்த சில மாதங்களில் பெரும் சவால்களை சிறப்பாகக் கையாண்டது. விநாயகர் சிலை ஊர்வலம் சிறப்பாகவும், அமைதியாகவும் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 28.09.2022 அன்று ஒர் இயக்கம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பல வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டு அமைதியை நிலை நாட்டியது. இந்தச் சம்பவங்கள் தொடர்புடைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்மூலம் அசாதாரண சூழ்நிலையில் பாதுகாப்புப் பணிகளை துரிதமாக கையாளும் திறனில் ஓர் உயர்ந்த அளவீட்டினை எட்டியது நம் காவல்துறை. இமானுவேல் சேகரன் நினைவு நாள் (11.09.2022), மருது சகோதரர்கள் பிறந்த நாள் (24.10.2022) நிகழ்வுகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு, இந்நிகழ்சிகள் சிறப்புற நடைபெற காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. 23.10.2022 அன்று கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஒரு வாகனம் வெடித்தது, அதில் இருந்த நபரும் இறந்தார். தீபாவளி முந்தைய நாளான அன்று அந்த நிகழ்வில் அனைத்து தடயங்களையும் திரட்டி இறந்த நபரை அடையாளம் கண்டு, ஆறு முக்கிய குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தது நமது காவல்துறை. இந்தச் சம்பவத்தை அறிவுப்பூர்வமாகவும், துரிதமாகவும், பொறுப் புணர்வுடனும் கையாண்டதால் தீபாவளி பண்டிகை எந்தப் பதட்டமும் இல்லாமல், கோலாகலமாக கொண்டாடச் செய்தது தமிழ்நாடு காவல்துறை.

கோவையில் கார் வெடித்த வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை தமிழ்நாடு முதல்வர் 31.10.2022 அன்று நேரில் அழைத்து பாராட்டுச் சான்றுகளை வழங்கி கவுரவித்தார். 30.10.2022 அன்று தேவர் ஜெயந்தி விழாவில் சுமார் 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, இந்த நிகழ்ச்சி சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெறச் செய்தார்கள். மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், இரவு பகலாக ஓய்வின்றி, நீங்கள் பணியாற்றிய விதம் போற்றுதலுக்குரியது. தமிழக காவல்துறையின் இந்த அற்பணிப்பும், ஒற்றுமை திறனும், சிறப்பான செயல்பாடும் நாட்டிற்கே ஒரு முன் உதாரணமாகவும் திகழ்கிறது, அனைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும், சவால்களையும் கடந்த சில மாதங்களாக திறம்பட கையாண்ட உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து வீரத்துடனும், விவேகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கடமையாற்ற வாழ்த்துகிறேன். இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.