Take a fresh look at your lifestyle.

சர்வதேச மகளிர் தினம்: பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய கமிஷனர் சங்கர் ஜிவால்

69

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் அவரது துணைவியாருடன் கலந்து கொண்டு பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மரக்கன்றுகளை வழங்கினார்.

இன்று (08.03.2022) சர்வதேச மகளிர் தினத்தை (International Women‘s Day) முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் ஒருங்கிணைந்து மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மற்றும் அவரது துணைவியார் மம்தா ஜிவால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

மேலும் அனைத்து பெண் காவல் ஆளிநர்களுக்கும் இதயம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து மரக்கன்றுகளை வழங்கினார். மம்தா ஜிவால் மகளிர் தின விழா கேக் வெட்டி சிறப்பித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பெண் காவல் ஆளிநர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் லோகநாதன், செந்தில்குமார், டாக்டர் கண்ணன், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, தலைமையிட இணைக்கமிஷனர் சாமுண்டிஸ்வரி, கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் பிரபாகரன், மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, வடக்கு மண்டல இணைக்கமிஷனர் ரம்யாபாரதி, மற்றும் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர் .