சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி
indian woman cricketer koswami retired from international matches
லார்ட்ஸ், செப். 25
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் விளையாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வேகப்பந்து வீச்சில் முத்திரை பதித்த இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சு வீராங்கனை 39 வயது ஜூலன் கோஸ்வாமி நேற்றைய போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். முன்னதாக கோஸ்வாமியை கவுரவிக்கும் வகையில் ‘டாஸ்’ போடும் நிகழ்ச்சிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தன்னுடன் அவரை அழைத்து சென்றார். அவர் பேட்டிங் செய்ய வருகையில் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் வரிசையாக நின்று கைதட்டி வரவேற்றனர். இதேபோல் பீல்டிங் செய்ய களம் இறங்குகையில் கோஸ்வாமிக்கு இந்திய அணி வீராங்கனைகள் மைதானத்தில் வரிசையாக நின்று கைதட்டி உற்சாகப்படுத்தி கவுரவம் அளித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அந்த அணி வீராங்கனைகள் கையெழுத்திட்ட சீருடை (பனியன்) நினைவுப்பரிசாக அளிக்கப்பட்டது. அத்துடன் இந்திய அணி தரப்பிலும் அவருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
கோஸ்வாமி கூறியதாவது: 1997ல் ஈடன் கார்டனில் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எல்லைகளில் வரும் பந்து பொறுக்கும் சிறுமியாக மைதானத்தில் பணியாற்றினேன். அன்றைய தினம் நானும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என கனவுகண்டேன். அப்படித்தான் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. நிறைய முயற்சி செய்தேன். எனது நாட்டிற்காக விளையாடியது என் வாழ்வில் மிகப்பெரிய தருணம். நான் இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடினேன். அதில் ஒன்றையாவது வென்றிருந்தால், எனக்கும், இந்தியாவுக்கும், மகளிர் கிரிக்கெட்டிற்கும் சிறப்பாக இருந்திருக்கும். அதுதான் இறுதி இலக்கு. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அது எனக்கு ஒரு வருத்தம். இந்தியா என்ற பெயர் எழுதப்பட்ட ஜெர்சியை அணிந்துகொள்வது தான் எப்போதும் அனுபவிக்கும் தருணம். அது என் வாழ்வில் எனக்கு மறக்க முடியாத விஷயம்” என்று உருக்கமாக பேசினார்.