Take a fresh look at your lifestyle.

சம்பா பருவ பயிர்காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு: இம்மாதம் 15ம் தேதி கடைசி நாள்: சண்முக சுந்தரம் ஐஏஎஸ் உத்தரவு

69

சம்பா பருவத்தில் பயிர்காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கு இம்மாதம் 15ம் தேதி கடைசி நாள் எனவும் -விவசாயிகள் திட்டத்தில் சேர்வதற்கு அழைப்பு விடுத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் 15.09.2022 அன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் வசிக்கும் விவசாயிகள் இப்பருவத்திற்கு பயிர்க்காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான இறுதிநாள் 15:11.2022 ஆகும்.

சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்ய விரும்பி, கூட்டுறவு சங்கங்களை நாடி வரும் கடன் பெற்றோர் மற்றும் கடன் பெறாதோர் என அனைத்து விவசாயிகளும், பயிர்க்காப்பீடு செய்வதற்கான இறுதி நாளுக்குள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனுறும் வகையில், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்பெறும் பொதுச்சேவை மையங்கள் ஆகியன வங்கி விடுமுறை நாட்களான 1211.2022 மற்றும் 13.11.2022 (இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களும் திறந்து வைத்து தேவையான ஆணைகளை தொடர்புடைய சங்க/வங்கி பணியாளர்களுக்கு வழங்கிடுமாறு மண்டல இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சங்கத்தை அணுகும் எந்த ஒரு விவசாயியும் திருப்பி அனுப்பப்படாமல், பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதையும், அவர்தம் விவரங்கள் உடனுக்குடன் இணைய முகப்பில் (Web Portal) பிழையின்றி பதிவேற்றம் செய்யப்பட்டு, வசூலிக்கப்பட்ட காப்பீட்டு கட்டணம், தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்திற்கு உரிய கால வரம்புக்குள் செலுத்தப்படுவதை கண்காணித்து உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்து திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறும், மேலும் 12.11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரு நாட்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்காப்பீட்டு பிரீமியத்தொகை பெற்றுக்கொள்ளப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.