சம்பளம் சரியாக கொடுக்காததால் முன்னாள் ராணுவ வீரர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம்,
கோட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 50). முன்னாள் ராணுவ வீரரான இவர் சென்னை சேத்துப்பட்டு மெக்னிக்கல் ரோட்டில் உள்ள
ராயல் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 19.03.22 தேதி அன்று பணியில் சேர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள புதிதாக கட்டும் கட்டிடத்திற்கு செக்யூரிட்டியாக பணி செய்து வந்துள்ளார்.
தற்போது அவருக்கு வங்கியில் அரசு பணி கிடைத்ததால் அது சம்பந்தமாக 3 மாத பயிற்சிக்காக திருவனந்தபுரம் செல்ல உள்ளதால் தான் பணி செய்த காலத்திற்கான சம்பளத்தை கேட்டுள்ளார். ஆனால் செக்யூரிட்டி நிறுவனத்தின் உரிமையாளர் பரந்தாமன் அதற்கு மறுத்து, தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.
இது தொடர்பாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் அளித்தார். போலீசார்
இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்து அடுத்த மாதம் பத்தாம் தேதி ராமச்சந்திரனை சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விஷயம் சம்பந்தமாக மன விரக்தியில் இருந்த ராமச்சந்திரன் நேற்று இரவு 9.30 மணிக்கு செக்யூரிட்டி அலுவலகத்தில் வைத்து வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அதன் காரணமாக மயக்கம் ஏற்படவே அருகில் இருந்த அவரை சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் ராணுவ வீரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.