சபரிமலை ஐயப்பன் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ. 125 கோடியை எட்டியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலைக்கு ஆண்டு தோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் வருகை குறைந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என கருதப்பட்டது. அதே போல் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ந்தேதி நடை திறக்கப் பட்டது முதல் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்புக்கு பிறகே சுவாமியை தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
சபரிமலையில் முதலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. கூட்டம் அதிகரிப்பின் காரணமாக தரிசன நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. அதாவது ஒரு நாளில் 18 மணி நேரம் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மண்டல, மகர விளக்கு பூஜை நெருங்குவதையொட்டி அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் 10 மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.நேற்று வரை 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 24 நாட்களில் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் அரவணை விற்பனை உள்ளிட்ட பலவற்றின் மூலம் ரூ.125 கோடி கிடைத்துள்ளது. வருகிற 27ந் தேதி மண்டல பூஜை காலம் வரை பக்தர்களுக்கு தேவையான அரவணை, அப்பம் இருப்பு வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தினமும் 3 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அரவணை டின்களை சொந்தமாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் அனந்தகோபன் அவர் கூறினார்.
பக்தர்கள் வசதிக்காக புதிய 5 திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் ரூ.15 கோடி மதிப்பில் அப்பம், அரவணை தயாரிப்பதற்கு தேவையான மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது. மேலும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குன்னூர் அணையில் இருந்து சபரிமலைக்கு குழாய் பதிக்கும் திட்டம், பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது, நிலக்கல் அடிவாரத்தில் ரூ. 8 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது உள்பட 5 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.