Take a fresh look at your lifestyle.

சட்டசபையில் கவர்னர் உரை சர்ச்சை: ஜனாதிபதியிடம் திமுக புகார்

47

தமிழக சட்டசபையில் கவர்னர் உரை விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஜனாதிபதி முர்முவை தி.மு.க.வினர் சந்தித்து புகார் அளித்தனர்.

தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. அதில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசுகையில் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்ததுடன், கவர்னர் உரையில் தவிர்த்தவற்றை சேர்த்தும், புதிதாக சேர்த்து வாசித்தவற்றை நீக்கியும், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையிலும் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அன்றைய தினமே நிபுணர்கள், தி.மு.க சட்டப் பிரிவினர், மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கவர்னர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவது என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது.இதையடுத்து, ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டபோது, இன்று பகல் 11.45 மணிக்கு தி.மு.க. தலைவர்கள் 4 பேர் தன்னை வந்து சந்திக்கலாம் என்று அனுமதி வழங்கினார்.

இதையடுத்து சென்னையில் இருந்து சட்ட அமைச்சர் ரகுபதி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீல் வைத்த கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், ‘9-ந்தேதி சட்டசபையில் கவர்னர் உரையின் போது சில பகுதிகள் தவிர்க்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு அமைச்சர் ரகுபதி தி.மு.க. எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி.வில்சன் ஆகியோர் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை தி.மு.க. பிரதிநிதிகள் குழு சந்தித்து விளக்கம் அளித்து பேசினார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பியிருந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்தனர். ஜனாதிபதி அதை பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியை சந்தித்த பின்னர் தி.மு.க. எம்பி டி.ஆர். பாலு டெல்லியில் அளித்த பேட்டியில் “சட்டசபையின் மரபை மீறி தமிழக கவர்னர் நடந்து கொண்டார். அவருடைய நடவடிக்கைகளை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினோம். கவர்னரின் செயல் அனைத்து மக்களையும் அவமதிக்கும் செயல். அதுமட்டுமல்லாமல் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் கவர்னர் எழுந்து சென்றார். அந்தச் செயல் ஒட்டுமொத்த தேச மக்களையும் இழிவுபடுத்தும் செயல். இதைத் தான் நாங்கள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினோம்.

முதல்வரின் கடிதத்தில் அன்றைய சம்பவங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதை வாசித்துவிட்டு ஜனாதிபதி முடிவெடுப்பார். ஜனாதிபதியை நியமிப்பதே உள்துறையும், ஜனாதிபதியும் தான். அதனால் எப்படி நியாயம் கிடைக்கும் என்று நீங்கள் எழுப்பும் ஊகங்கள் அடிப்படையிலான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது. ஆகையால், ஜனாதிபதியின் முடிவு என்னவாக இருக்கும் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் கவர்னர் உரையில் இருந்த சில பத்திகளை அவர் தவிர்த்தது, தேசிய கீதத்தை புறக்கணித்தது பற்றி பேசி வந்துள்ளோம். ஜனாதிபதியிடம் வழங்கப்பட்ட கவர்னருக்கு எதிரான மனுவில் உள்ள விஷயங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் தெரியும்.

தமிழக கவர்னர் தொடர்ந்து இவ்வாறு நடக்கிறார் என்றால், அவருக்கு தமிழ்நாட்டில் சனாதன கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு திராவிட நாடு. பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிய தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்திற்கு மாறான கொள்கையை திணிக்க முடியாது.
தமிழக கவர்னர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவோம்.
ஜனாதிபதியை சந்தித்ததால் மத்திய அமைச்சர் அமிஷாவை சந்திப்பதற்கான அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.