கோவையில் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டு தப்பி ஓட முயன்றான். சப் இன்ஸ்பெக்டர் திருப்பி சுட்டதில் காலில் காயத்துடன் ரவுடி போலீசாரிடம் சிக்கினான்.
கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி சத்தியபாண்டியை கடந்த மாதம் 12ஆம் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. போலீசார் விசாரணையில் இரு ரவுடி குழுக்களுக்கு இடையே இருந்த முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் அரக்கோணம் நீதிமன்றத்திலும், சஞ்சய் ராஜா என்பவர் எழும்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
இவர்களில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கபட்ட சஞ்சய் ராஜாவை கோவை அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சீன நாட்டு தயாரிப்பு என்பதும், இரு துப்பாக்கிகள் அவரிடம் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சென்னையில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்றொரு துப்பாக்கியை கோவை சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் சஞ்சய் ராஜா தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று காலை சஞ்சய் ராஜாவை தனிப்படை போலீசார் கரட்டுமேடு பகுதிக்கு அழைத்துச் சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்றனர். அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி இரண்டு ரவுண்டு சுட்டார். அதிர்ஷ்டவசமாக போலீசாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனையடுத்து உதவிஆய்வாளர் சந்திரசேகர் தற்பாதுகாப்பிற்காக சஞ்சய் ராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சஞ்சய் ராஜாவின் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. நிலை தடுமாறி கீழே விழுந்த சஞ்சய் ராஜாவை காவல்துறையினர் பிடித்து அவர் கையில் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்தில் பயன்படுத்தபட்ட துப்பாக்கிகள் இரண்டும் சீன நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சீனமாடல் துப்பாக்கியை இந்த கூலிப்படை கும்பல் வாங்கியது எப்படி என்பது குறித்தும், கள்ள சந்தையில் சீன நாட்டு ஆயுதங்கள் விற்கப்படுகின்றனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கோவை அரசு மருத்துவ மனையில் சஞ்சய்ராஜா அனுமதிக்கபட்டுள்ள ரெட் ஜோன் பிரிவின் முன்பாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த இடத்தை கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:- கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை சஞ்சய் ராஜாவை விசாரிப்பதற்காக தனிப்படை இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர். சஞ்சய் ராஜாவிடம் 2 துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் கூறியிருந்தார். ஏற்கனவே ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்திருந்தோம். மற்றொரு துப்பாக்கியை பறிமுதல் செய்ய இங்கே அழைத்து வந்தனர். சரவணம்பட்டி பகுதியில் தான் சஞ்சய் ராஜா தங்கி இருந்தார். இதனால் இந்த பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக சொன்னதால் பறிமுதல் செய்ய அவரை அழைத்து வந்தனர்.
இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போல இருக்கிறது. மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் சுட தொடங்கி விட்டார். போலீசாரை குறிவைத்து சுட்டார். தற்பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் சுட்டதில் சஞ்சய் ராஜா காலில் குண்டு பாய்ந்தது. அவர் 10 நிமிடத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். தற்போது நல்ல நிலையில் இருக்கின்றார். சஞ்சய் ராஜா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. துப்பாக்கி எங்கு வாங்கினார் என்பது குறித்து விசாரித்தபோது, பீகார், ஒரிசா என சொல்லி இருக்கின்றார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.