கோவையில் பள்ளிச்சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கோவை, சுண்டப்பாளையம், ஐஎன்டியூசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 72). இவர் கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயது பள்ளிச்சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமிகளின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த புகார் உண்மை என தெரியவந்தது. அது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெருமாள் சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆதாரங்களை தகுந்த சாட்சியங்களுடன் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணை கடந்த 4ம் தேதியன்று முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 72 வயது முதியவர் பெருமாள் சாமிக்கு 18 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அடங்கிய காவல் குழுமத்துக்கு கோவை டிஐஜி முத்துசாமி வெகுவாக பாராட்டினார்.