கோவையில், குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த 2 பேரை 4 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். சிவானாந்தா காலனியை சேர்ந்தவர் மனோஜ். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் வழக்கு ஒன்றில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக இன்று காலை கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டிற்கு வந்தனர். பின்னர் கோகுலும், மனோஜூம் கோர்ட்டுக்கு பின்புறம் உள்ள பகுதிக்கு டீ குடிக்க சென்றனர். அப்போது அவர்களுக்கு பின்னால் 4 பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் 2 பேரும், அவர்கள் கோர்ட்டிற்கு வந்தவர்களாக இருப்பார்கள் என நினைத்து கடைக்கு நடந்து சென்றனர். கடையின் அருகே சென்று, பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கும்பல் வந்த வேகத்தில் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கோகுலை சரமாரியாக வெட்டினர்.
இதில் கோகுலின் கழுத்தில் கத்தி வெட்டு விழுந்தது. கத்தி அப்படியே கழுத்தில் மாட்டி கொண்டது. இதை பார்த்து அதிர்ச்சியான மனோஜ், அவர்களிடம் இருந்து கோகுலை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல், அவரையும் வெட்டினர். இதனால் பலத்த காயம் அடைந்த 2 பேரும் அலறி சத்தம் போட்டனர். இதனை அந்த வழியாக சென்ற வர்கள் பார்த்து அதிர்ச்சி அடந்தனர். ஒருசிலர் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பொதுமக்களில் சிலர் வாலிபர்களை வெட்டிய கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள்ளாகவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்களும், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசாரும் உடனடியாக படுகாய மடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனோஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த கோகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே இரண்டு பேரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.