கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் நேற்று அதிகாலை காரில் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே ஈஸ்வரன் தெருவில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 4.10 மணிக்கு கோவில் வழியாக ஒரு கார் சென்றது. கோவில் முன்புள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது திடீரென கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி இரண்டு துண்டாக ஆனது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் ஒருவர் உடல் கருகி இறந்து கிடந்தார். உக்கடம் போலீசார் விரைந்து வந்து உடல் கருகி இறந்து கிடந்தவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சமீபத்தில் பாஜ அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகள் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கோவையில் பதட்டம் ஏற்பட்டது. அந்த பதட்டம் ஓய்வதற்குள் தற்போது கோவில் முன்பு கார் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். தீப்பிடித்து எரிந்த காரில் 2 சிலிண்டர்கள் இருந்தது. அந்த 2 சிலிண்டர்களும் கருகிய நிலையில் காணப்பட்டன. பலியான நபர் காரில் சிலிண்டர்களை எடுத்துச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. 2 சிலிண்டர்களும் ஒன்றோடு ஒன்று உரசியதில் கியாஸ் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ‘‘கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கோவையில் கார் வெடித்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து விபத்து நடந்த கோவில் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான போலீசார் இங்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.