கோவையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஒரே நாளில் 150 புகார் மனுக்களுக்கு தீர்வு கண்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவையில் ஐஜி சுதாகர் மற்றும் கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோர் மேற்பார்வையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவ ட்டங்களில் அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் நேற்று பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் அளித்த மனுக்களில் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனு தாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறு விசாரணை நடத்தப்பட்டது. நேற்று ஒரே நாளில் நடந்த பெட்டிசன் மேளாவில் நிலுவையில் இருந்த குடும்ப பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சனை தொடர்பாக மொத்தம் 170 மனுக்கள் மீது மறுவிசாரணை மேற்கொண்டதில் 150 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப் பட்டது. 19 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 20 மனுக்கள் மீது மனு ரசீதுகள் வழங்கப்பட்டன. மேலும் 39 மனுக்கள் உயரதிகாரிகளின் மேல் நடவடிக்கைக் காக மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு போன்ற பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டது. 72 மனுக்கள் சுமூகமான முறையில் விசாரித்து முடித்து வைக்கப்பட்டது. பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு நடந்த இந்த பெட்டிஷன் மேளா கோவை சரக பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.