சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலியான சொத்து மதிப்பு ஆவணத்தை தாக்கல் செய்த வழக்கில் பெண் உட்பட இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற (CMM Court, Egmore) அமர்வு எழுத்தர் நிலவரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த திவ்யா (34) என்பவர் சிறையிலிருந்த தனது பெற்றோரை பிணையில் விடுவிக்க, பிணை ஆவணமாக சொத்து மதிப்பு சான்றிதழை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதனை ஆய்வு செய்த போது அது போலி என தெரியவந்துள்ளது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் துணை ஆணையர் மீனா தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு தடுப்புப் பிரிவு (Forgery) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதனையடுத்து
போலி சொத்து மதிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கொடுங்கையூர், நேதாஜி நகரைச் சேர்ந்த திவ்யா (34) மற்றும் அதனை தயார் செய்து கொடுத்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கோபால் (67) ஆகிய இருவரையும் நேற்று (09.03.2022) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.