Take a fresh look at your lifestyle.

கோயம்பேட்டில் கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து அமோக விற்பனை

94

பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் கரும்பு, இஞ்சி, மஞ்சள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான பூஜை பொருட்கள், காய்கறி பழங்கள், பூக்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கரும்பு, மஞ்சள் இஞ்சி கொத்து, வாழைப்பழங்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, வாழை இலை, தென்னங்கீற்றுகளால் செய்த தோரணம் ஆகியவற்றையும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர். சென்னை கோயம் பேடு மார்க்கெட்டுக்கு மதுரை, மேலூர், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கடலூர், சிதம்பரம், பண்ருட்டி உள்பட பல இடங்களில் இருந்து லாரி, லாரியாக கரும்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கட்டு கரும்பு (20 கரும்பு) ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.40-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல இஞ்சி மற்றும் மஞ்சள் குலைகளும் அதிகமாக கொண்டுவரப்பட்டு உள்ளன. மஞ்சள் ஒரு கொத்து பெரியது ரூ.100 முதல் ரூ.200 வரையிலும், இஞ்சி கொத்து பெரியது ரூ.100 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. வாழைத்தார் ஒன்றின் விலை அதிகபட்சம் ரூ.600க்கு விற்கப்படுகிறது. பூச்சந்தை, பழச்சந்தை, காய்கறிச் சந்தை ஆகியவற்றில் வழக்கத்தைவிடப் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து நள்ளிரவில் ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் பொங்கல் பொருட்களை வாங்கி சென்றனர். அதேபோல் அதி காலை முதல் பொதுமக்கள் அதிகளவில் வந்து பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.