சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போனை பறித்துச் சென்ற 2 நபர்களை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 24, என்பவர் வேலைக்கு செல்வதற்காக நேற்று (02.03.2022) காலை சுமார் 03.40 மணியளவில், கோடம்பாக்கம் ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார். , கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், பாங்க் ஆப் பரோடா வங்கி அருகில் அவர் செல்லும்போது, 3 நபர்கள் பாலகிருஷ்ணனை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். பாலகிருஷ்ணன் பணம் தர மறுக்கவே அவரை தாக்கி, அவர் வைத்திருந்த Vivo செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கோடம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதனையடுத்து இந்த கொள்ளை தொடர்பாக கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜன், 20, தங்கபாண்டி (எ) அம்புலி, 19 ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பாலகிருஷ்ணனின் Vivo செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள மற்றொரு எதிரி அஜய் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.