கொரோனா தொற்றால் உயிரிழந்த 6 காவல் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி: கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்
கொரோனா தொற்றால் உயிரிழந்த 6 காவல் ஆளிநர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி தலா ரூ. 25 லட்சம் என ரூ. 1.5 கோடி மற்றும் உடல் நலக் குறைவால் இறந்த 1 காவல் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதி ரூ.3 லட்சம் மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்ற 29 காவல் குடும்பத்தினருக்கு காவலர் சேமநல நிதி ரூ. 42,07,616 -ஆகியவற்றை கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று கமிஷனர் அலுவலகத்தில் வழங்கினார்.
சென்னை பெருநகரில் கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல்துறையினர் முன்களப் பணியாற்றியபோது மதுரவாயல் போக்குவரத்து எஸ்ஐ குமார், செம்பியம் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ அருள், எஸ்ஆர்எம்சி சிறப்பு உதவி ஆய்வாளர் அமலதாஸ், யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு எஸ்ஐ அமல்ராஜ் கட்டுப்பாட்டு அறை தலைமைக்காவலர் கார்த்திக்கேயன், மற்றும் வில்லிவாக்கம் காவல் நிலைய காவலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து (Hon’ble TamilNadu Chief Minister Relief Fund) ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 6 காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று (09.03.2022) காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா தொற்றால் இறந்த மேற்படி 6 காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் என மொத்தம் ரூ. 1.5 கோடிக்கான வரைவோலையை வழங்கி, ஆறுதல் கூறினார்.
மேலும் சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்த உதவி ஆய்வாளர் செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 3 லட்சத்துக்கான வரைவோலையை கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார். மேலும் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை அல்லது உயர் மருத்துவ சிகிச்சை பெற்று அதற்கான மருத்துவ சிகிச்சை தொகையை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து (Tamilnadu Police Benevolent Fund – TNPBF) பெற்றுத்தர கோரி மனு கொடுத்திருந்த 29 காவல் குடுமபத்தினருக்கு மொத்தம் ரூ. 42,07,616- ஒதுக்கீடு செய்யப்பட்டது. 29 காவல் குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தமிழ்நாடு காவலர் சேமநல நிதிக்கான வரைவோலையையும் கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் அவர்கள் 7 இறந்த காவல் ஆளிநர்கள் மற்றும் 29 பாதிக்கப்பட்ட காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகை ரூ. 1,98,07,616- க்கான வரைவோலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காவல் ஆணையாளர் மேற்படி இறந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களை பெற்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன், இணை ஆணையாளர் சாமூண்டீஸ்வரி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.