Take a fresh look at your lifestyle.

கொரோனா தாக்குதலை சமாளிக்க காவலர்களுக்கு 2.40 லட்சம் ஜிங்க் மாத்திரைகள்: கமிஷனர் சங்கர்ஜிவால்

122

கொரோனா தாக்குதலை சமாளிக்க காவலர்களுக்கு 2.40 லட்சம் ஜிங்க் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்க சென்னை நகர  கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தாக்குதல் குறைந்துள்ள போதிலும் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்கவும், முன்களப் பணியாளர்களாக காவலர்கள் சிறப்பாக பணியாற்றவும் சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு 1.5 லட்சம் முகக்கவசம், 2,40,000 ஜிங்க் மாத்திரைகளும், 2,40,000 மல்டி வைட்டமின் மாத் திரைகளும், 48,000 கபசுர குடிநீர் பாக்கெட்டுகளும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்று 2வது அலை பரவிய நேரத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு 25.04.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பின்னர் 10.05.2021 24.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியது, பின்னர் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது.

அச்சமயத்தில் கொரோனா 2வது அலை தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் ஆளிநர்களை கொண்டு, சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும், சுமார் 200 தற்காலிக வாகன சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.

சோதனைச்சாவடிகளில் காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் ஆளிநர்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, முழு ஊரடங்கு சமயத்தில் வெளியில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு, உரிய அனுமதி இல்லாமலும், மிக அத்தியாவசிய தேவையின்றியும் வெளியில் சுற்றிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்கால கட்டத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி, வாகனத் தணிக்கை, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் உட்பட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தங்களது இன்னுயிர் துறந்தனர். ஆகவே, கமிஷனர் சங்கர்ஜிவால் முழு ஒத்துழைப்பின்பேரில், முன்கள பணியில் தொய்வின்றி பணியாற்றிய சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் சுமார் 24,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க கடந்த மே-2021 முதல் தற்போது வரையில் கொரோனா தடுப்பு உபகரணங்களான முகக்கவசங்கள், திரவ சுத்திகரிப்பான்கள், கையுறைகள், பாதுகாப்பு உடை கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கைகள் விடுத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக முன்களப்பணியாளர்களாகிய சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் பாதுகாப்பை கருதி, மேலும் 1.5 லட்சம் முகக்கவசங்கள், 2,40,000 ஜிங்க் மாத்திரைகள், 2,40,000 மல்டி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் 48,000 கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.