சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் அவரது கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1 கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டாக் கத்திகள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் மற்றும் 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தாமஸ் டேவிட், சிவக்குமார், பயிற்சி உதவி ஆய்வாளர்கள் முரளி சங்கர், ராஜா மற்றும் காவலர்கள் சந்தான மகாலிங்கம், துரைராஜ் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் நேற்று அதிகாலை 2 மணியளவில் T.H ரோடு, R.R நகர் சந்திப்பில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த 2 நபர்களை நிறுத்தி விசாரணை செய்ய முயன்ற போது, காரில் வந்த 2 நபர்களும் காரிலிருந்து இறங்கி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிப் பிடிக்க துரத்தினர். கொடுங்கையூர் குப்பைமேட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது ஏறி தப்பிக்க அவர்கள் கீழே குதித்த போது இருவரும் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். தனிப்படை போலீசார் பிடிபட்ட இருவரையும் கைது செய்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் விழுப்புரம் மாாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (31), செங்குன்றத்தைச் சேர்ந்த அப்பு (எ) விக்கிரமாதித்தன் (37) என்பது தெரியவந்தது. அவர்களிட மிருந்து 1 கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டா கத்திகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் 4 கிலோ சிக்கி முக்கி கற்கள், 750 கிராம், இரும்பு ஆணிகள், 2 கட்டு மூங்கில் குச்சிகள் மற்றும் 750 கிராம் நூல்கண்டு மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளை பிரகாஷ் கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு வழக்குகள் உட்பட 9 வழக்குகள் உள்ளதும், மற்றொரு குற்றவாளியான அப்பு (எ) விக்கிரமாதித்தன் மீது மாதவரம் காவல் நிலையத்தில் 1 ஆள்கடத்தல் வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
இருவரும் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்களது எதிரி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களை தயார் செய்து வந்தது தெரியவந்தது. இருவரும் பிடிபட்ட குற்றவாளி பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் அப்பு (எ) விக்கிரமாதித்தன் ஆகியோர் குறித்து விசாரணை மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆயுதங்களுடன் காரில் சுற்றிய 2 குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல் குழுவினர் சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.