கேரள அரசுடன் இணைந்து அடுத்த ஆண்டு வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றிவிழா நாகர்கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
கேரள அரசுடன் இணைந்து அடுத்த ஆண்டு வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றி விழாவை கொண்டாட வேண்டும் என நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவிலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தோள்சீலை போராட்டம் பற்றியும், அதன் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் பேசியதாவது:- இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால் தமிழினத்தினுடைய பண்பாடு சிதைக்கப்பட்டு விட்டது. மதம், சாதி, சாஸ்திர சம்பிரதாயம், புராணங்களின் பெயரால் மனிதரை மனிதர் பாகுபடுத்தி விட்டார்கள். ஆணுக்கு பெண் அடிமை என்றாக்கி விட்டார்கள். சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு. தீண்டாமையை புனிதம் ஆக்கினார்கள். இதற்கு எதிராக அருட்பிரகாச வள்ளலாரும், அய்யா வைகுண்டரும், அயோத்திதாச பண்டிதரும், தந்தை பெரியாரும் நடத்திய சீர்திருத்த இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு தலை நிமிர வைத்திருக்கிறது. பக்தி வேறு, பாகுபாடு வேறு என்பதை உணர்த்தியவர்கள் இந்த தலைவர்கள்.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட இந்த பகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடியது அதிகமாக இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியில் ஒடுக்கப்பட்ட சமுதாய பெண்கள் அனுபவித்த துன்ப துயரம் என்பது மற்ற பகுதிகளில் இல்லாதது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், மார்பில் சேலை போடக்கூடாது என்பதை போன்ற இழிநிலை வேறு எங்கும் இல்லை. இதனை மீறி சேலை போட்டுக் கொள்ள முயற்சித்த பெண்கள் தாக்கப்பட்டார்கள். சித்ரவதை செய்யப்பட்டார்கள். இதை விடக் கொடூரமாக ‘முலைவரி’ என்ற வரியையே போட்டிருக்கிறார்கள்.
இதை விட அநியாயம் இருக்க முடியுமா? அப்படி வரிகட்டாத காரணத்தால் தனது மார்பையே அறுத்து எறிந்தாள் ஒரு பெண். அது தான் ‘முலைச்சிப் பறம்பு’ வழிபாட்டுத் தலமாக இன்றும் இருக்கிறது. முலை வரிக்கு எதிராக 1822-ம் ஆண்டு போராட்டம் தொடங்கியது. 50 ஆண்டு காலம் இந்த மண்ணிலே வீரமிக்க போராட்டங்கள் நடந்தது. சீர்திருத்த கிறித்தவ இயக்கத்தினர் இந்த போராட்டத்திற்கு துணையாக இருந்தார்கள். அய்யாவழி என்ற புதிய வழியை உருவாக்கிய அய்யா வைகுண்டர் இந்த போராட்டத்திற்கு துணையாக இருந்தார். இதன் விளைவாகத்தான் 1859-ம் ஆண்டு உத்தரம் திருநாள் அரசர் உத்தரவு போட்டார். தோள்சீலை அணியலாம் என்ற உரிமை அதன்பிறகுதான் கிடைத்தது.
இந்த வெற்றிக்கு காரணமான, அய்யா வைகுண்டர், கர்னல் மன்றோ, பீட் பாதிரியார், ரிங்கல் தவுபே பாதிரியார் ஆகியோர் நம் அனைவராலும் வணங்கத் தக்கக்கூடியவர்கள். இப்படி எத்தனையோ படிகளைத் தாண்டித்தான் இப்போது இருக்கும் உயரத்தை நாம் பெற்றுள்ளோம். இந்தியாவுக்கு அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக எத்தனையோ கெடுதல்களை பிரிட்டிஷ் ஆட்சி செய்திருந்தாலும் சமூகரீதியாக பல்வேறு சீர்திருத்தச் சட்டங்களையும் உருவாக்கி கொடுத்ததை மறுப்பதற்கில்லை. நீதிக்கட்சி ஆட்சியானது இதனை முழுமையாகச் செய்து காட்டியது. பஸ்களில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கவில்லை என்றால் பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரில் இருந்து பள்ளிகளை நோக்கிச்செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார்.
இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கூடங்களை அதிகளவில் திறந்தவர்தான் பெருந்தலைவர் காமராசர். அதனால்தான் அவரை பச்சைத்தமிழன் என்று புகழ்ந்தார் தந்தை பெரியார். அதைத் தொடர்ந்து வந்த பேரறிஞர் அண்ணா, கருணாநிதி கல்விக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தார்கள். கல்லூரி கல்வியை ஊக்குவித்தார்கள். இன்றைய திராவிட மாடல் அரசானது உயர்கல்விக்கு, ஆராய்ச்சிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி.
நம்மை ஏன் இன்றைக்கு சிலர் எதிர்க்கிறார்கள்?. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை இவர்கள் உயர்த்துகிறார்களே என்பதால்தான் எதிர்க்கிறார்கள். வீட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டிய பெண்ணுக்கு இலவச பஸ் பயணத்திற்கு ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்களே என்ற காரணத்தால் தான் எதிர்க்கிறார்கள்.
படிக்க வரும் பெண் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்களே என்பதால்தான் எதிர்க்கிறார்கள். மற்றவர்கள், அதாவது நாம் எல்லாரும் முன்னேறுவது இவர்களுக்கு பிடிக்கவில்லை. அனைவரையும் நாம் முன்னேற்றுவது இவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள். இதை பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள் ஆகும்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் 1924-ம் ஆண்டு வைக்கத்துக்கு சென்று போராடினார். தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களை அழைத்து வந்து போராடினார். இறுதியில் வெற்றியும் பெற்றார். அந்த போராட்டம் தான் எனக்கு ஊக்கமளித்த போராட்டம் என்று அண்ணல் அம்பேத்கர் எழுதி இருக்கிறார். அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம்.
கேரளாவில் இருந்து முதல்-அமைச்சர், பினராயி விஜயன் இங்கு வந்திருக்கிறார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர் மனோ தங்கராஜ், பாலபிரஜாபதி அடிகளார், விஜய் வசந்த் எம்.பி., சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.