சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கான கேடயம் பெற்ற சென்னை பெருநகர காவல் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
சென்னை பெருநகர காவல்துறையில், காவலர் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரையிலான காவல் ஆளிநர்களுக்கான சென்னை பெருநகர காவல் எக்சிக்யூட்டிவ் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் (Chennai City Police Executive Co-operative Gift and Credit Society), கடந்த 2004ம் ஆண்டு முதல், புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் 2,508 காவல் ஆளிநர்களை உறுப்பினர்களாக சேர்ந்து சிறுசேமிப்பு திட்டம் மற்றும் கடன் வழங்கப்பட்டு, அதற்கான மாதச்சந்தா தொகைகள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் மூலம் இச்சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியமர்த்தி, உறுப்பினர்களின் கடன் தொகை, மாதச்சந்தா, ஈவு கணக்குகள் உள்ளிட்ட நிர்வாக கணக்குகள் பதிவேற்றம் செய்து திறம்பட நிர்வாகம் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பு கூட்டுறவு சங்கங்களின் பேரவை கூட்டப்படும். அதன்பேரில், இச்சங்கத்தின் 2021-2022ம் நிதியாண்டிற்கான 18வது பேரவைக் கூட்டத்தில், சென்னை பெருநகர காவல் எக்சிக்யூட்டிவ் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டு, அதில் ரூ.2,75,04,000/- ரூபாய் நிகர லாபம் ஈட்டி சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை மற்றும் சிறுசேமிப்பிற்கான வட்டி தொகையை வழங்கியது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சங்க உறுப்பினர்களுக்கு அதிகபட்ச ஈவுத்தொகையான 14% ஈவுத்தொகை வழங்கப்பட்டுள்ளதும், உயிரிழந்த காவல் உறுப்பினர்களின் கடன்தொகை பிணையாளர் நிவாரண நிதி மூலம் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியின் 92வது பேரவை பொதுக்கூட்டம் கடந்த 30.09.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னையில் உள்ள 284 கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள், திறன் மற்றும் நிர்வாகம் அடிப்படையில் மதிப்பீடு செய்து, சென்னை பெருநகர காவல் எக்சிக்யூட்டிவ் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் உட்பட 20 கூட்டுறவு சங்கங்கள் சிறந்த கூட்டுறவு சங்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கேடயங்கள் வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் சிறப்பாக பணிபுரிந்து சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கான கேடயம் பெற்ற, சென்னை பெருநகர காவல் எக்சிக்யூட்டிவ் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளான காவல் ஆளிநர்களை நேற்று (22.10.2022) நேரில் அழைத்து பாராட்டினார். உடன் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன் இருந்தார்.