Take a fresh look at your lifestyle.

கூட்டநெரிசல்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் 19ந் தேதி ஆன்லைன் தரிசனம் ரத்து

63

பக்தர்கள் வருகைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் 19 ந்தேதி ஆன்லைன் தரிசனம் இல்லை என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால், அன்றைய நாளில் முன்பதிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முன்பு முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் அன்றைய நாளில் தரிசனம் செய்ய அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16 ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 30 நாள்களில் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கும் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரிசன நேரம் 19 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. படிகளில் ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறி, திருமுற்றத்தில் நான்கு வரிசைகளில் சென்று, மூன்று வினாடிகளில் ஐயப்பனை வணங்கி சென்றால் ஒரு நாளில் 91 ஆயிரத்து 200 பேர் தரிசனம் செய்ய முடியும். இதுதான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கேரள மாநில போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியாது என தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்தணந்திட்டை கலெக்டர் திவ்யா எஸ். அய்யர் கூறுகையில், தரமான ரோடுகள், 1855 குடிநீர் இணைப்புகள், 2,406 கழிவறைகள், 34 ஆயிரத்து 100 தங்குமிடங்கள், 2,000க்கும் அதிகமான பறக்கும் படையினர், நிலக்கல் பம்பை தடத்தில் 200 பஸ்கள் நடத்திய 39 ஆயிரம் சர்வீஸ்கள், துப்புரவு பணிக்கு 1,000 பேர் என அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செயல்படுகின்றன. தினமும் பல்வேறு துறைகளை சேர்ந்த 18 ஆயிரம் பேர் உழைக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.