கூடுவாஞ்சேரியில் ரியல் எஸ்டேட் வியாபாரியை கொன்ற மோசடி நிதி நிறுவன அதிபர் மற்றும் கூலிப்படையினர் 11 பேர் கைது
சென்னை, கூடுவாஞ்சேரியில் எஸ்டேட் வியாபாரியை வெட்டிக் கொன்ற மோசடி நிதி நிறுவன அதிபர் மற்றும் கூலிப்படையினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரி செந்தில்குமார் (41). கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதியன்று தனது மகனை பைக்கில் பள்ளியில் கொண்டு போய் விட்டு வந்தபோது செல்வி நகர் ரோட்டில் காரில் வந்த கூலிப்படையினர் செந்தில்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். பலத்த காயங்களுடன் செந்தில்குமார் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு செப்டம்பர் 26ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி
இறந்து வி ட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், துணைக் கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த கிரீன் அக்ரோ டெக் என்ற நிதி நிறுவனத்தில் ரூ. 15 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அந்நிறுவனத்தை ஜுலை மாதம் மூடிவிட்டனர். அந்தப் பணத்தை திரும்பத்தரும்படி கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் எழிலரசன் (31), மேலாளர் விஜயலட்சுமி (33) ஆகியோர் சென்னையைச் சோந்த கூலிப்படையினரான அயனாவரத்தைச் சேர்ந்த பிரசாந்த் (31), பிரவீன் (32), பெரம்பூர் முருகேசன் (28), ஐசிஎப் காலனி சரத் என்கிற சண்முகம் (27), விக்கி என்கிற விக்னேஷ்வரன் (24), ராகுல் (22), கொடுங்கையூர் ஆகாஷ் (25), கிரண்லால் (23), சுஜய்சாந்த் (39) ஆகிய 9 பேரை ஏவி செந்தில்குமாரை கொலை செய்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் 11 பேரையும் கைது செய்தனர். கைதான 11 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கை திறம்பட விசாரனை செய்த தனிப்படையினரை தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.