பேதை பெதும்பை மங்கை
மடந்தை
அரிவை தெரிவை பேரிளம்பெண் என்று
பருவம் பொருந்தப் பெயர் கொண்டாய்!
பூவை பாவை சிறுமி சுந்தரி
கோதை வஞ்சினி வனிதை என்று
சீராட்டிப் பாராட்டப் பெயர் கொண்டாய்!
இளையாள் நல்லாள் நங்கை காரிகை
பெண்டு மகடூஉ மடவரல் என்று
மகிழ்ந்து பழகப் பெயர் கொண்டாய்!
மாயோள் தையல் அணங்கு ஆடவள்
மானினி சுரிகுழலி இளம்பிடி என்று
மனதைக் கவரும் பெயர் கொண்டாய்!
தோழி நாரி செவிலி விறலி
மாது மதங்கி மடவோள் என்று
தமிழர் போற்றும் பெயர் கொண்டாய்!
தாய் தாரம் தங்கை தமக்கை
மகள் மருமகள் பேத்தி என்று
உறவைச் சொல்லும் பெயர் கொண்டாய்!
மக்களை ஈன்றவர் மகிழ்வுறும் இந்நாள்
மகளிர் இன்புறும் பொன்நாள் என்றே
மகிழ்ந்து பாடிடு மங்கலம் பூண்டே!
அ.அமல்ராஜ் IPS