இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக (National Unity Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி நேற்று சென்னை ராஜாஜி சாலை, போர் நினைவுச்சின்னம் அருகே, தீவுத்திடல் நுழைவாயில் அருகில், நடைபெற்ற காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த பேரணி போர் நினைவுச்சின்னம் அருகிலுள்ள தீவுத்திடல் நுழைவு வாயில் அருகில் தொடங்கி, கொடி மர இல்ல சாலை வழியாக முத்துசாமி பாலம் வரை சென்று மீண்டும் போர் நினைவுச் சின்னத்தை வந்தடைந்தது.
அதன் பிறகு “தேசிய ஒற்றுமை தினம் உறுதி மொழி” ஏற்கப்பட்டது. இக்கொடி அணிவகுப்பு பேரணியில் சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப்படை, சிறப்பு அதிரடிப்படை, சிறப்பு அதிவிரைவு படை, காவல் ஆண் மற்றும் பெண் வாத்தியக் குழுவினர் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவல் ஆளிநர்கள் என சுமார் 300 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ஈஸ்வரன், ஆயுதப்படை துணைக்கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.