சென்னை, நவ. 18–
குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு டிஜிபி சைலேந்திரபாபு காவல் அதிகாரிகளுக்கு புது உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:–
‘‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19ம் நாள் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அன்றைய தினம் பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப் பட வேண்டும். அங்கு அவர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் சட்டம் மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான வினாடி வினா போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, காவல் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் போன்றவற்றை காவல்துறை சார்பில் நடத்த வேண்டும். இந்நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளுக்கு காவல் நிலையங்கள் தொடர் பான புரிதல் ஏற்படும். காவலர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்லுறவு மேம்படும் அதன், மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் அவை தொடர்பான தகவல் தாமதமின்றி பெறப்பட்டு நடவடிக்கை மேற் கொள்ள பேருதவியாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்களுக்கும் இந்த உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. .