குற்றாலத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் செயல்படும் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் ஏராளமான தனியார் விடுதிகள் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கு கிறது. மேலும், இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாரயண பிரசாத் அமர்வு, குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர். மேலும், செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பான அறிக்கைகளை ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று குற்றாலத்தில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஊட்டி, குமரி மாவட்டங்களிலும் செயற்கை நீர்வீழ்ச்சி விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.