Take a fresh look at your lifestyle.

குற்றத்தில் ஈடுபடும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் பறவை திட்டம்: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்

82

சென்னை பெருநகர காவல்துறை, சிறைத்துறை, சமூக நலபாதுகாப்பு துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவி குழு மற்றும் PRISM தன்னார்வு அமைப்பினர் ஒருங்கிணைந்து, இளம்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் ‘‘பறவை‘‘ என்ற புதிய திட்டத்தை, உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட முதன்முதலாக சிறிய மற்றும் அற்ப வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் விதமாக ஆலோசனைகள் மற்றும் தொழிற் பயிற்சிகள் அளித்து வாழ்வில் முன்னேற்றும் வழிகாட்டியாக செயல்பட ‘பறவை‘ என்ற அமைப்பு தொடங்க ஆயத்தப் பணிகள் மேற்கொண்டு பணிகள் நிறைவடைந்தது.

அதன்பேரில் நேற்று (28.03.2022) மாலை 5.30 மணியளவில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதியரசர் P.N. பிரகாஷ், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் ‘‘பறவை‘‘ திட்டத்தை துவக்கி வைத்தனர்.

இந்த புதிய திட்டத்தின் முக்கியமான நோக்கம், மது, போதை மற்றும் கஞ்சா போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையான இளம் குற்றவாளிகளை அவர்களுக்கென தனியாக ஆலோசனை, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆலோசனை, சட்ட உதவி, தொழில் வழிகாட்டுதல், அவர்களது திறமையை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பயிற்சி வகுப்பு அளித்து தக்க வேலை வாய்ப்பு பெற உதவி செய்தனல், வாழ்வை நலமாக்க சிறையிலேயே முறையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி, சமுதாயத்தில் சரியான பாதையில் கொண்டு செல்ல அவர்களை நல்வழிபடுத்துவதாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்க சிறைத்துறை, சமூக நல பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவிக்குழு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆகிய அரசு துறைகளில் இதற்கென ஒரு அலுவலரை நியமித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி மற்றும் உறுப்பினர் செயலாளர், TNSLSA K.ராஜசேகர், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ், சமூகநலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் வளர்மதி, சிறைத்துறை இயக்குநர் சுனில்குமார் சிங், கூடுதல் கமிஷனர்கள் லோகநாதன் (தலைமையிடம்), கண்ணன் (தெற்கு), தெற்கு மண்டல இணை ஆணையாளர் நரேந்திரன் நாயர், மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, வடக்கு மண்டல இணைக்கமிஷனர் ரம்யாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.