Take a fresh look at your lifestyle.

குரோஷியாவிடம் வீழ்ந்த பிரேசில்: பெனால்டி ஷூட்-அவுட்டில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது

38

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் வீழ்ந்து அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூ கேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய முதலாவது காலிறுதியில் 5 முறை சாம்பி யனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில், குரோஷியாவுடன் மோதியது. அரை இறுதிக்கு முன் னேற வேண்டும் என்ற துடிப்பில் இரு அணியினரும் தொடக்கத்திலிருந்தே கோல் அடித்து முன்னிலை பெறும் முனைப்புடன் கடுமையாக விளையாடினர். பந்தை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதிலும், கடத்திக் கொடுப்பதிலும் இரு அணியினரும் மல்லு கட்டி யதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆனாலும் இலக்கை நோக்கி பந்தை உதைப்பதில் பிரேசிலின் கை சற்று ஓங்கியே இருந்தது.

4-வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர், 20 மற்றும் 41-வது நிமிடத்தில் நெய்மார் ஆகியோர் அடித்த ஷாட்டுகளை குரோஷிய கோல் கீப்பர் டொமினிக் லிவாகோவிச் லாவகமாக தடுத்து நிறுத்தினார். அதே சமயம் குரோஷிய வீரர்களால் பிரேசில் கோல் கம்பத்தை நெருங்க முடிந்ததே தவிர கோல் நோக்கி பந்தை துல்லியமாக அடிக்க முயற்சித்தும் பலன் இல்லை. முதல் 45 நிமிடங்கள் வரை இதே நிலைமை தான் காணப்பட்டது. பிற்பாதியிலும் பிரேசில் வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளை குரோஷிய கோல் கீப்பர் லிவாகோவிச் முறியடித்தார். எதிரணியின் தடுப்பு அரணை பிரேசில் வீரர்களால் கடைசி வரை உடைக்க முடியவில்லை. வழக்கமான 90 நிமிடங்களில் ஆட்டம் கோலின்றி சமநிலையில் இருந்தது.

இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. 103-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெட்கோவிச் கம்பத்திற்கு மேலாக அடித்து ஏமாற்றினார். ஒரு வழியாக 105-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் முதல் கோலை அடித்தார். அவரை தடுக்க குரோஷிய கோல் கீப்பர் லிவாகோவிச் முன்னோக்கி வந்த போது அவரை சாதுர்யமாக ஏமாற்றிய நெய்மார் வலைக்குள் பந்தை அனுப்பி ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்றார். ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 116-வது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 1- 1 என்ற கணக்கில் சமநிலை ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் பிரேசில் 4 வாய்ப்புகளில் இரண்டை வீணடித்தது. அதில் முதல் வாய்ப்பில் ரோட்ரிகோ அடித்த பந்தை குரோஷிய கோல் கீப்பர் லிவாகோவிச் தடுத்தார். 4-வது வாய்ப்பில் மர்கியூனோஸ் அடித்த பந்து கம்பத்தில் பட்டு நழுவியது. பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷியா 4- 2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தது.

நெய்மார் கோல் அடித்து சாதனை செய்தபோதிலும் அரை இறுதி வாய்ப்பை இழந்ததால் கதறி அழுதார். கோப்பைபை வெல்லும் வாய்ப்பில் இருந்த 5 முறை சாம்பியனான பிரேசில் காலிறுதியோடு போட்டியிலிருந்து வெளியேறியது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி கோப்பையை வென்றதில்லை.