Take a fresh look at your lifestyle.

கும்பகோணம் அருகே 5 அடி நடராஜர் சிலை மீட்பு: சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி தினகரன் அதிரடி நடவடிக்கை

105

கும்பகோணத்தில் சிலை வடிக்கும் பட்டறையில் 5 அடி உயரமுள்ள பிரமாண்ட நடராஜர் சிலையை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

 

கும்பகோணம் பகுதியில் பழமையான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு அவை வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. தமிழக சிலை திருட்டு தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில், ஐஜி தினகரன் மேற்பார்வையில் திருச்சி சிலைத்திருட்டு தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில், டிஎஸ்பி கதிரவன், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் எஸ்ஐக்கள் ராஜசேகரன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அதனையடுத்து கும்பகோணம் சுவாமிமலை அருகிலுள்ள டி. மாங்குடியை சேர்ந்த சுரேஷ் என்கிற சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான சிலை வடிக்கும் பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 அடி உயரமும் சுமார் 4 அடி அகலமும் கொண்ட தொன்மையான உலோக நடராஜர் சிலையினை கண்டு பிடித்தனர். அந்த சிலைக்குரிய முறையான ஆவணங்கள் எதுவும் சுரேஷிடம் இல்லை. இதனால் போலீசார் சிலையை பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கவுள்ளனர்.

நடராஜர் சிலையானது தமிழகத்தின் உள்ள ஒரு கோயிவிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையை மீட்ட தனிப்படையினரை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு இயக்குநர் ஜெயந்த் முரளி ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.