Take a fresh look at your lifestyle.

குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் எப்போது தரப்படும்: ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

70

குடும்பத் தலைவிக்கு ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் தேதி மார்ச் மாதம் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

இன்று ஈரோடு சம்பத் நகரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இந்த இரண்டாண்டு காலத்தில், செய்திருக்கக்கூடிய சாதனைகளை சொல்ல வேண்டுமென்று சொன்னால், ஒரு மிகப்பெரிய பட்டியலை எடுத்துச் சொல்லவேண்டும். நான் அவற்றில் சிலவற்றை மாத்திரம் அதுவும் பொத்தாம் பொதுவாக அல்ல, ஆதாரத்தோடு குறிப்பிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். மகளிருக்கு இலவச பேருந்து பயண வசதி, தேர்தல் நேரத்தில் சொன்னோம். ஆட்சிக்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதுடன் கோட்டைக்குச் சென்று 5 கையெழுத்துகளை நான் போட்டபோது, அந்த ஐந்து கையெழுத்துக்களில் ஒரு கையெழுத்துதான் மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற அந்த திட்டத்திற்கான கையெழுத்து. இது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். இன்றைக்கு, மகளிர் எல்லாம் பேருந்தில் போகிற காட்சியெல்லாம் நாம் பார்க்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது கிடையாது, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்தை நம்முடைய தமிழ்நாட்டில்தான் நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.

அதேபோல், பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்கள் ஏற்கனவே அவர்களுக்கு மதிய உணவு என்ற ஒரு திட்டம் இருந்தாலும், காலையில், அவர்கள் உணவருந்தாமலேயே, பள்ளிக்கு வரக்கூடிய கொடுமைகளை நான் பல மாவட்டங்களில் சென்றபோது, அங்கே பள்ளிக்கூடத்திற்கு ஆய்வு செய்ய சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்களை பார்த்துக் கேட்டேன். “ஏன் தம்பி சோர்வாக இருக்கிறாய்?”. அதற்கு அவர், “அய்யா, நான் காலையில் எதுவும் சாப்பிடாமல் வந்திருக்கிறேன்” என்று ஒரு சோகத்துடன் சொன்னார். அதற்கு பிறகு பல மாணவர்களை விசாரித்தேன். அந்த பள்ளிக் கூடத்திற்கு வந்திருக்கக்கூடிய 80% மாணவச் செல்வங்கள் காலையில் எந்த உணவும் சாப்பிடாமல், அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலையை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அதிகாரிகளை அழைத்து இதற்கு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று சொல்லி, காலை உணவு வழங்கக்கூடிய திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து, “முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்” என்ற அந்தத் திட்டத்தை இன்றைக்கு நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலே, ஒன்றரை லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை பெருமையோடு நான் குறிப்பி ட விரும்புகிறேன். அதே போல, உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள். உலகத்திலேயே இப்படி ஒரு போட்டியை சிறப்பாக நடத்தியதாக வரலாறு கிடையாது. இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல, உலக அளவிலே பெருமைப்படத்தக்க வகையிலே செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருக்கிறோம்.

அதேபோல், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்கள், அது ஆளும்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க.வாக இருந்தாலும், அல்லது கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதி களிலும் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை அவர்களிடத்திலே கேட்டு, ஒவ்வொரு ஆண்டும் பத்து கோரிக்கைகளை அவர்களிடமிருந்து பெற்று அதை நிறைவேற்றி தரவேண்டும் என்பதற்காக ஒரு திட்டத்தை நாம் அறிவித்து, அதை நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம், அதுதான் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற அந்த திட்டத்தை நாம் இப்போது நிறைவேற்ற தொடங்கி இருக்கிறோம்.

அதே போல், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் என்பது ஸ்டாலின் மட்டும் முதல்வராக இருக்க முடியாது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்கள் அத்தனைபேரும் முதல்வராக வரவேண்டும், நாட்டினுடைய முதலமைச்சராக வர வேண்டும் என்பது வேறு, தொழிலில், கல்வியிலே, வாழ்க்கை முன்னேற்றத்திலே அவர்கள் எல்லாம் முதல்வராக வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்த திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம், அதை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

வேலைவாய்ப்பை பெறுவதற்கு அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கக்கூடிய காலத்திலேயே அவர்களுக்கு உரிய திறன் பயிற்சியை அவர்களுக்கு வழங்கக்கூடிய அற்புதமான திட்டத்தை நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலமாக நாங்கள் நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள். இருபது கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள், காவல் ஆணையம், உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி, கல்லூரிக் கனவு, வேலைவாய்ப்பு முகாம்கள், தமிழ் பரப்புரைக் கழகம், சிறு, குறு புத்தாக்க நிறுவனங்கள், பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கிட சிற்பி திட்டம், ஆன்லைன் ரம்மி ஒழிப்புச் சட்டம்…

கல்லூரிக்கு செல்லக்கூடிய பெண்கள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல முடியவில்லை, என்ன காரணம் என்றால் வறுமை. படிப்பதற்கு வேண்டிய வசதி இல்லாத ஒரு சூழ்நிலை. அதை மனதில் வைத்துக் கொண்டு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப் பெண் திட்டம் என்கிற அருமையான திட்டத்தை நாங்கள் அறிவித்து அதையும் நாங்கள் இரண்டாண்டு காலமாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை இரண்டு முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றி நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால் இதுவரை தமிழகத்தினுடைய கவர்னரோ அல்லது ஒன்றிய அரசோ அதைப்பற்றி சிந்திக்கவில்லை, கவலைப்படவில்லை. ஆனால் என்னுடைய லட்சியம் எல்லாம் என்னுடைய கொள்கை எல்லாம் குறுகிய காலத்திற்குள் நீட் தேர்விற்குரிய விலக்கை பெற்றே தீர வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இப்படி எத்தனையோ திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். நாங்கள் அறிவித்த திட்டங்களை எல்லாம் நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்று தவறான தகவலை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் தொடர்ந்து என்ன சொல்கிறார் என்று சொன்னால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த எதையும் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அண்ணா தி.மு.க. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? அவர்கள் சொன்ன செல்போன் வாக்குறுதி என்ன ஆனது? அம்மா மினரல் வாட்டர் வாக்குறுதி என்ன ஆனது? அண்ணா தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை.

நான் இப்போது சொன்னேன், ஆதாரத்தோடு குறிப்பிட்டு சொன்னேன், ஆகையால் இதையெல்லாம் தயவுசெய்து எதிர்க்கட்சித் தலைவர், ஒருவேளை இது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றால், கண் டாக்டரை பார்த்து, கண்ணாடி போட்டுக் கொண்டு அதை படித்துப் பாருங்கள். நான் பேசிய பேச்சையாவது கேட்டுப் பாருங்கள். இதையெல்லாம் உண்மையா, இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
85% பணிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் மிச்சம் இருக்கிறது, இல்லை என்று மறுக்கவில்லை. 5 ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத்தான் நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக சொல்லி இருக்கிறோம். 5 ஆண்டுகள் தேவையில்லை, இந்த ஆண்டுக்குள்ளாக எல்லா பணிகளையும் நிறைவேற்றி காட்டுவேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படி மிச்சம் இருக்கக்கூடிய அறிவிப்புகளில் ஒரு முக்கியமான ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். மக்களே மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். அதுதான் பெண்களுக்கு வழங்கக்கூடிய உரிமைத் தொகை. மாதம் 1000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். நிதிநிலையை மட்டும் ஒழுங்காக வைத்திருந்தீர்கள் என்றால், நாங்கள் வந்தவுடன் அதையும் நிறைவேற்றி இருப்போம்.

கொள்ளையடித்துவிட்டு போனீர்களே, கஜானாவை காலியாக மட்டுமல்ல, கடனையும் வைத்துவிட்டு போய் இருக்கிறீர்களே, அதை எல்லாம் இன்றைக்கு நாங்கள் சரி செய்து கொண்டு இருக்கிறோம். அவை எல்லாம் சரி செய்யப்பட்டவுடன் நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், வருகிற மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது, அந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 எப்பொழுது வழங்கப்படும் என்று அறிவிக்க இருக்கிறோம். இது ஸ்டாலின் சொல்லும் வார்த்தை. எடப்பாடி சொன்ன வார்த்தையல்ல.

நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம், சொல்லாததையும் செய்வோம், சொன்னதையும் செய்து கொண்டே இருப்போம். இது மக்களுக்காக பாடுபடக்கூடிய ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் பக்கபலமாக இருக்க வேண்டும்.

இந்த இடைத்தேர்தலை இடைத்தேர்தலாக மட்டும் பார்க்காதீர்கள், இந்த ஆட்சி எப்படி இருக்கிறது, இந்த ஆட்சி என்ன செய்து கொண்டு இருக்கிறது, தேர்தல் நேரத்தில் சொன்னதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்களா, முறையாக இந்த ஆட்சி நடக்கிறதா என்பதை எடைபோட்டு நீங்கள் வழங்க வேண்டிய தீர்ப்பு. அப்படி எடைபோட்டு தீர்ப்பளிக்க நீங்கள் தயாராகிவிட்டீர்களா, இல்லையா? உறுதியாக இருக்கிறீர்களா? அதில் எந்த சந்தேகமும் இல்லையே?

உங்களுடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குத் தானே வெற்றியை தேடித்தர போகிறீர்கள். ஏற்கனவே அவருடைய திருமகன் ஈவெரா ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். இங்கே வந்துள்ள இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்த போது, அவர் சொல்லிவிட்டு போயிருக்கிறார், ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றியை தேடித் தர வேண்டும் என்று, நான் கேட்கிறேன், உதயநிதி சொன்னதையும் தாண்டி, அண்ணா தி.மு.க.வை சார்ந்தவர்கள் டெபாசிட் இழக்கக்கூடிய அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும், அதுதான் முக்கியம். அப்படிப்பட்ட வெற்றியை தேடி தருவீர்களா, நிச்சயமாக? உறுதியாக? சத்தியமாக? (மக்கள் “ஆம்” என்று உறுதி)

இவ்வாறு அவர் பேசினார்.