Take a fresh look at your lifestyle.

‘கிஷான் ரேஷன் ஷாப்’ பெயரில் ரூ. 3.65 கோடி பருப்பு மோசடி: பலே ஆசாமி கைது

332

கிஷான் ரேஷன் ஷாப் என்ற பெயரில் போலியான நிறுவனம் நடத்தி சென்னையில் பருப்பு மொத்த வியாபாரியிடம் ரூ.3.65 கோடி மோசடி செய்த பலே ஆசாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கை செய்தனர்.

சென்னை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் என்.ஆர். பாலாஜி (46). பருப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். என். ஆர் பாலாஜிக்கு அவரது நண்பர் மூலம் பாண்டியராஜன், ஜெய்கணேஷ், முருகேசன், ஹரிகரன் மற்றும் உமா ஆகியோர் அறிமுகமானார்கள். இவர்கள் கூட்டுச் சேர்ந்து “கிஷான் ரேஷன் ஷாப்” என்ற ரேசன் கடை என்ற பெயரில் கடைகளை ஆரம்பித்துள்ளனர். விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை நேரடியாக கொள்முதல் செய்து அதை சில்லறை விற்பனை செய்யப் போவதாகவும், மொத்த வியாபாரிகளிடமிருந்து பருப்பு போன்ற பொருட்களை கொள்முதல் செய்ய உள்ளதாக என்.ஆர் பாலாஜியிடம் கூறியுள்ளனர். மேலும் மத்திய அரசால் வழங்கப்பட்டது போன்ற போலியான ஒப்பந்த ஆணைகளையும் காண்பித்துள்ளனர்.

இதனை நம்பிய பாலாஜி கடந்த மார்ச் 2021ம் ஆண்டு முதல் பாண்டியராஜனுக்கு சுமார் ரூ. 3.65 கோடி மதிப்புள்ள பருப்பு மற்றும் பயிறு வகைகளை சப்ளை செய்துள்ளார். பொருட்களை பெற்றுக் கொண்டு பாண்டியராஜ் உள்ளிட்டோர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து என்.ஆர்.பாலாஜி கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் புகார் அளித்தார். அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு பிரிவுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதனையடுத்து தலைமறைவான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பாண்டியராஜன் (44) நேற்று (5.04.2022) கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட பாண்டியராஜன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கிஷான் ரேஷன் ஷாப் என்பது மத்திய அரசின் நிறுவனம் என போலியாக ஆவணங்களை காண்பித்துள்ளார். மேலும் பல கோடி மதிப்பிலான பருப்பு மற்றும் பயிறுவகைகளை கொள்முதல் செய்து அதற்கான தொகையை மத்திய அரசின் திட்டத்திலிருந்து 45 -நாட்களில் Bank Account-க்கு வந்துவிடும் என கூறியுள்ளார். இதே போல விருதுநகர், கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் உள்ள வியாபாரிகளிடம் இது போன்று மோசடியில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் பாண்டியராஜின் கூட்டாளிகள் ஜெய்கணேஷ், முருகேசன், ஹரிகரன் மற்றும் உமா ஆகிய 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட பாண்டியராஜன் நேற்று (05.04.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.