Take a fresh look at your lifestyle.

பெரும்பாக்கம் கிளினிக்கில் புகுந்து டாக்டரிடம் கொள்ளை முயற்சி: டம்மி துப்பாக்கியுடன் 4 பேர் கும்பல் கைது

42

சென்னை செம்மஞ்சேரியில் கிளினிக்கில் புகுந்து டாக்டரிடம் பணம் கொள்ளையடிக்க முயன்ற 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, பெரும்பாக்கம், வள்ளுவர் நகர், 6வது தெருவைச் சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் சதீஷ் குமார் (வயது 28). சோழிங்கநல்லூர் ஏரிக்கரை பகுதியில் நலம் ஹெல்த் கேர் என்ற பெயரில் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதியன்று இரவு 9.45 மணியளவில் டாக்டர் சதீஷ்குமாரின் கிளீனிக்குக்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். காலில் அடிபட்டுள்ளதாகவும் கட்டுப்போடும் படியும் ஒருவன் கூறியுள்ளான். சதீஷ்குமார் அவர் களிடம் பேசிக்கொண்டிருந்த போது திடீரென வந்தவர்களில் ஒருவன் சதீஷின் கையை பின்னால் பிடித்துக் கொள்ள மற்றொருவன் ஆஸ்பத்திரியில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அவரது கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டினான். இதனால் பயந்து போன சதீஷ்குமார் தன் பணத்தை தந்து விடுவதாக கூறியுள்ளார். பின்னர் கொள்ளையர்களில் ஒருவன் தான் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேயை எடுத்து சதீஷ்குமார் முகத்தில் அடித்து ள்ளான். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து உடைத்து விட்டு அவரது விவோ செல்போனை பறித்துக் கொண்டு வெளியே தப்பியோடினர். சதீஷ்குமார் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். இரண்டு பேரில் ஒருவன் ரோட்டில் நிலைதடுமாறி தவறி விழுந்தான். அவனை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து அவனை செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் நடராஜன் அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் புவனகிரி தாலுகாவைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. கீழே விழுந்ததில் அடிபட்டதால் அவனை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பிரகாஷுடன் சிதம்பரத்தைச் சேர்ந்த சத்தியசீலன், பிரதாப், வெற்றிச் செல்வன் ஆகிய 3 நபர்கள் வடபழனியில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர். சத்தியசீலனும், ஆயுர்வேத டாக்டர் சதீஷும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து கிளினிக்கை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர். இதில் சத்தியசீலன் ஆஸ்பத்திரிக்கு மருந்து சப்ளை செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சத்தியசீலனின் நடவடிக்கைகள் சரி இல்லாததால் அவனை சதீஷ் நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து தனது நண்பர்களான பிரதாப், வெற்றிச் செல்வன், பிரகாஷ் ஆகிய மூவருடன் சேர்ந்து சத்திசீலன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் பிரதாப்பும், பிரகாசும் உடன் பிறந்த சகோதரர்களாவர். மேலும் அவர்கள் தங்கியிருந்த வடபழனி அறையில் டம்மி துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.