அல்லாஹ்வின் நேசருக்கு தலையில் முளைத்த கொம்பு:
கருணை காட்டிய காதிர் வலி நாயகம்
ஒரு நாள் நாகூர் ஆண்டவர்கள் சாகுல் ஹமீது பாதுஷா (ரழி) அவர்கள் குவாலியர் செல்லும் வழியில் பஸ்தாம் பட்டணத்துக்கு செல்லும் வழியில் தங்களது சீடர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு இஸ்லாமிய கூட்டம், ஆண்டவர்கள் முன்பு வந்து கைக்கட்டி நின்று கீழ்க்கண்ட வார்த்தைகளை சொல்ல துவங்கினார்கள்.
‘‘எஜமான் அவர்களே! இந்த பஸ்தாம் என்னும் பட்டணத்தில் ‘ஷெய்ஹு நஜிமுத்தீன்’ என்று ஒரு பெரியவர் இருக்கின்றார். அவர் அல்லாஹுத்தாஆலாவுக்கு மிகவும் நெருங்கிய ‘வலி’ (இறைநேசர்)யாக உள்ளார். அவருக்குக் கராமத்துக்கள் அதிகம் உண்டு. வழக்கமாக அவர் பட்டணத்தில் குடியிருப்பது இல்லை. பட்டணத்தின் அருகில் உள்ள நதிக்கரையில் ஒரு மாளிகைக் கட்டி, அதில் நின்று அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார். இன்றைய தினம் அவர் தமது மாளிகையின் மேல் மாடம் ஜன்னலைத் திறந்து அதில் தலையை இட்டுக் கொண்டு, ஆற்றில் வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தலையில் இருபுறமும் இரண்டு கொம்புகள் முளைத்துக் கிளையிட்டுப் படர்ந்து கொண்டன. அதனால் தலையை உள்ளுக்கு இழுக்கக் கூடாமல் மிகவும் வருத்தப் படுகின்றார். அவரைக் காண்பதற்காகப் பட்டணத்தில் உள்ள பெரிய மனிதர்கள் அனைவரும் வந்து கூடியுள்ளனர்.
அவருக்கு நேரிட்ட வில்லங்கத்தைப்பற்றி அதிசயப்பட்டுக் கவனித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது அந்த ‘வலி’ தன்னைக் காண வந்த ஜனங்களைப் பார்த்து, “என் நேசர்களே! எனக்கு நேரிட்டு இருக்கும் இந்தச் சோதனையான வில்லங்கத்தைப்பற்றி உங்களுக்கு ஒன்றும் புலப்படாது. இது வந்த வழியையும், விவரத்தையும் நான் அறிவேன். இதை நிவர்த்தித்துக்கொள்ளும் விதம் எனக்குத் தெரியும். இந்த வில்லங்கத்தைத் தீர்க்கும்படி நான் அல்லாஹுத்தஆலாவிடம் மன்றாடினேன். அதற்கு ‘‘நஜுமுத்தீனே! உமது பிழை பொறுக்கப்பட்டது. ஆனாலும், நீர் யாருக்கு இந்தப் பிழையைச் செய்தீரோ அவர், சையிது அப்துல் காதிர். அவரிடம் மன்னிப்புக் கேட்பதில் நீர் கவனம் எடுத்துக்கொள்வீராக’’ என்று அல்லாஹ்வின் புறத்தில் இருந்து கட்டளை பிறந்துள்ளது. அந்த சையிது அப்துல் காதிர் என்பவர் இப்போது இந்த ஆற்றங்கரையில் இன்ன இடத்தில் தொழுது விட்டு அல்லாஹ்வை திக்ர் செய்து கொண்டிருக்கிறார்.
நீங்கள் அவரிடம்போய், என் ஸலாத்தை சொல்லி என் நிலையை அறிவித்தால், அவர் மனம் இரங்கி என் அருகில் வந்து என்னைப் பார்த்து துஆ செய்வார். அப்போது இந்த ஆபத்து என்னை விட்டுவிடும்’’ என்று சொல்லி, எங்களைத் தங்கள் சமூகத்திற்கு அனுப்பித் தங்களை அழைத்துவரச் சொன்னார் என்றார்கள். இதைக் கேட்டவுடன் கருணைக் கடல் நாகூர் ஆண்டவர்கள் அவர்கள், ‘‘ஆ அப்படியா!!’’ என்று உடனே எழுந்து நஜூமுத்தின் வலியுடைய மாளிகைக்குப் போனார்கள். அங்கே நகரில் உள்ள பெரிய மனிதர்கள் எல்லாம் கூடி இருந்தார்கள். நஜுமுத்தின் வலியின் தலையில் கொம்பு முளைத்து ஜன்னலில் மாட்டிக் கொண்டு பாடுபடுவதைப் பார்த்து சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அவரை நோக்கி, ‘‘இதென்ன காரியம்?” என்று கேட்டார்கள். அப்போது நஜுமுத்தீன் வலி, நாகூர் ஆண்டவரை நோக்கி, “என் சகோதரரே! நீர் வெள்ளத்தில் ஏறிக்கொண்டு நட்டாற்றில் வரும்போது, உம்மைப் பார்த்து நான் சோதிக்க வேண்டும் என்று நதியைக் கொந்தளிக்கச் செய்து வெள்ளம் கரைபுண்டு போகச் செய்தேன். அப்போது நீர் செய்த துஆவினால் என் தலையில் இந்தக்கொம்புகள் முளைத்தன. அதனால் அதிர்ச்சியடைந்த நான் வருந்தி இந்த வில்லங்கம் தீர வேண்டும் என்று அல்லாகுத்த ஆலா இடம் இரந்து கேட்டேன். அதற்கு அவன் இந்த வில்லங்கம் உம்மிடம் மன்னிப்புக் கேட்பதைக் கொண்டுதான் நீங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளான்.
ஆகையால், செய்யிது அப்துல் காதிரே! நீர் அல்லாஹுத்தஆலாவுக்காக வேண்டி நான் செய்த பிழையை மன்னித்து இந்த வில்லங்கத்தை நீக்கி என்னை ரட்சிப்பீராக என்று சொல்லி நாயகத்தை வேண்டி நின்றார்.
இதனைக் கண்ட கருணைக்கடல் நாகூர் நாயகம் அவர்கள் மனம் இரங்கி, தங்கள் வலது கையைத் தூக்கி சைகு நஜுமுத்தீன் வலியுடைய தலையில் முளைத்திருக்கும் இரண்டு கொம்புகளுக்கும் இடையில் வைத்தார்கள். உடனே அந்தக் கொம்புகள் இரண்டும் சுருங்கிக் காணாமல் போயின. அவர் ஜன்னலுக்குள் மாட்டி இருந்த தலையை இழுத்துக் கொண்டு உடனே எழுந்து ஆண்டவர் அவர்களைக் கட்டித் தழுவி அதிக மரியாதை பண்ணி, ஒரு பீடத்தின்மேல் உட்காரும்படி வேண்டிக்கொண்டார். ஆண்டவர் அவர்கள் அந்தப் பீடத்தில் உட்கார்ந்தார்கள்.
வில்லங்கம் தீர்ந்த சைகு நஜுமுத்தின் வலி தமது மாளிகையில் வந்து கூடி இருக்கும் ஜனங்களைப் பார்த்து, “என் நேசர்களே! நீங்கள் எல்லாரும் எழுந்து நின்று இவருக்கு மரியாதை செய்யுங்கள். இவர் அல்லாஹுத்தஆலாவுக்கு மிகவும் விருப்பமானவர். இனிமேல் குத்புகளுக்கு எல்லாம் ‘குத்பு’ ஆவார். மனிதர்களையும், ஜின்களையும் ரட்சிக்கும் ஹவுது ஆவார்; அவ்விரு கூட்டத்திற்கும் நேர்வழி காட்டுவார். இவருடைய கராமத்துகள் இனி கியாமத்து உண்டாகும் வரையும் நிலை பெறும். இவருடைய ஜீவிய காலத்தில் இவரை நாடிய ஜனங்களை இவர் ரட்சிப்பது போல, மரணத்தின் பின்னும் ரட்சிப்பார். இவரைப் பின்பற்றிய மனிதர்களும், ஜின்களும் இவருடைய அடைக்கலத்தில் அச்சமற்று இருப்பார்கள். இவருடைய மகிமை என்னால் சொல்லும் தரம் உடையது அன்று” என்று சொல்லிக்காட்டினார். இதைக்கேட்ட அந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்று ஹஜரத் ஆண்டவர் அவர்களுக்குத் தாழ்ந்து, மரியாதை செய்தார்கள். பின்னர் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் சைகு நஜுமுத்தீன் மற்றும் அந்த ஊர் ஜனங்களிடம் விடைபெற்றார்கள்.
எஜமான் நேசன் ஹமீதுல் ஆஷிக்கீன்