Take a fresh look at your lifestyle.

காவல் மண்டலங்களுக்கான விளையாட்டுப் போட்டி: டிஜிபி சைலேந்திரபாபு கோப்பை வழங்கி பாராட்டு

87

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 61வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆண், பெண் காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கினர். இப்போட்டியில் சென்னை பெருநகர காவல்துறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பெருமை சேர்த்துள்ளது.

கடந்த 5ம் தேதியன்று சென்னை வேளச்சேரியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) நீச்சல் குள வளாகத்தில், 61வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி 22 (61st TamilNadu Police Inter Zonal Sports Meet 2021 – 2022) போட்டியை கமிஷனர் சங்கர் ஜிவால் துவங்கி வைத்தார். 5.3.2022 மற்றும் 06.3.2022 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நீச்சல், Cross Country, சைக்கிளிங் (Cycling) ஆகிய 3 போட்டிகளில் ஆண் மற்றும் பெண்களுக்கென 6 பிரிவுகளிலும், தடை தாண்டுதல் (Obstacles) போட்டியில் ஆண்களுக்கென 1 பிரிவிலும் என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (TSP), வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் மற்றும் கமாண்டோ படை (TNCF) என 7 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில், நீச்சல் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை பெருநகர காவல் அணி முதலிடத்தை வென்றது. Cross Country போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை பெருநகர காவல் அணி முதலிடத்தைப் பிடித்தது. மேலும் சைக்கிளிங் பிரிவில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் பெண்கள் பிரிவில் மத்திய மண்டலம் முதலாவதாகவும், தடை தாண்டுதல் (Obstacles) போட்டியில், தெற்கு மண்டலம் முதலாவதாகவும் வெற்றி பெற்றது.

மேலும், புள்ளிகள் அடிப்படையில், சென்னை பெருநகர காவல் அணி இப்போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் (Overall Champion) 1வது இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது. தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2வது இடம் பிடித்தது. இன்று (07.03.2022) மாலை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி கழக டிஜிபி விசுவநாதன், ஆயுதப்படை ஏடிஜிபி அபய்குமார் சிங், நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபி சங்கர், ஆயுதப்படை ஐஜி எஜிலியலரசன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் லோகநாதன், மற்றும் தலைமையிட இணைக்கமிஷனர் சாமுண்டிஸ்வரி, கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் பிரபாகரன், மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, வடக்கு மண்டல இணைக்கமிஷனர் ரம்யாபாரதி, தென்சென்னை இணைக்கமிஷனர் நரேந்திரன் நாயர் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் தமிழக காவல் மண்டலங்களில் இருந்து ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர் .
******