காவல் சிறார், சிறுமிகளுக்கு 60 கம்ப்யூட்டர்கள்: சென்னை மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி வழங்கினார்
சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையாளர் அவர்கள் பாரத ஸ்டேட் வங்கியினர் வழங்கிய 60 கணினி இயந்திரங்களை, 60 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களுக்கு வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும், புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் மேற்பார்வை அதிகாரி (Nodal Officer) மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, நேற்று (11.03.2022) காலை, எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தினர் வழங்கிய பயன்படுத்தப்பட்ட நல்ல நிலையில் உள்ள 60 கணினி இயந்திரங்களை, சென்னை பெருநகர காவலில் உள்ள 60 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் சாரண ஆசிரியர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கினார். மேலும், இக்கணினி மூலம் காவல் சிறார் மன்றங்களில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு கணினி பயிற்சி அளித்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.