சென்னை நகரில் கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார்.
கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த வருடத்திற்கான மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேற்று (01.03.2022) காலை ஈ.வி.கே சம்பத் சாலை, ஈ.வே.ரா சாலை சந்திப்பில் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.
மோர் வழங்கும் திட்டத்திற்கு நாளொன்றுக்கு ஒரு மோர் பாக்கெட்டின் விலை ரூ. 4.95 வீதம் 5000 மோர் பாக்கெட்டுகளுக்கு ரூ. 24,750-ம், 122 நாட்களுக்கு மொத்தம் ரூ. 30,19,500- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவலர்களுக்கு காலை மாலை என இருவேளையும் மோர் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சரத்கார், போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு) ராஜேந்திரன், போக்குவரத்து துணை ஆணையாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.