காவல் அருங்காட்சியகம் ஓராண்டு நிறைவு: டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷனர் சங்கர்ஜிவால் தலைமையில் கோலாகல விழா
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் ஒராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, காவல் அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் ஆகியோர் போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமானது (TamiNadu Police Museum) கடந்த 28.09.2021 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் இந்த ஓர் ஆண்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள், வெளிநாட்டவர்கள், பல்வேறு திரைத்துறையினர் மற்றும் தமிழக காவல்துறை, நீதித்துறை, ஆட்சிப்பணி உயர் அதிகாரிகள், காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 30,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காவல் அருங்காட்சியகத்திற்கு நேரில் வருகை புரிந்து பார்வையிட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காவல் வாத்தியக் குழுவின் இசை நிகழ்ச்சி, காவல் மோப்பநாய் கண்காட்சி, காவல் குதிரை கண்காட்சி, சிலம்பம், மைம் கூத்து, பொம்மலாட்டம், வினாடி வினா நிகழ்ச்சி, தோட்டக்கலை பயிற்சி, மரபு நடை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம், தற்கொலை தடுப்பு, மாசு கட்டுப்பாடு போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
காவல் அருங்காட்சியகம் தொடங்கி, ஓராண்டு நிறைவு அடைந்ததை முன்னிட்டு 14.09.2022 முதல் 26.09.2022 வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, விவாதமேடை, மாறுவேடப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், காவல் அருங்காட்சியகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாளினை முன்னிட்டு, இன்று (28.09.2022) ஒருநாள் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், காலை 11.00 மணியளவில் காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சியும், மாலை 3.00 மணியளவில் மோப்பநாய் கண்காட்சியும் நடைபெற்றது.
மேலும், இன்று (28.09.2022) மாலை 04.00 மணிக்கு காவல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற முதலாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவில், அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்ற 52 மாணவர்கள் மற்றும் கலந்து கொண்ட 143 மாணவர்கள் என மொத்தம் 195 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
மேலும், மன்னர் காலத்தில் காவல் அதிகாரிகள் அணிந்திருக்கும் உடை அணிந்த 250 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழங்கால சிலை திறக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக “On the streets of Chennai” குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிபிசிஐடி இயக்குநர் ஷகீல் அக்தர், சீருடைப் பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால், தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, லோகநாதன், கபில்குமார் சரட்கர் இணைக்கமிஷனர் சாமூண்டீஸ்வரி மற்றும் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.