கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜெண்டினா நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
அர்ஜெண்டினா இரு முறை சாம்பியன் என்ற அந்தஸ்துடனும், நெதர்லாந்து 3 முறை 2-ம் இடம் பிடித்த அணி என்ற நிலையிலும் களமிறங்குகின்றன. இன்றைய ஆட்டமானது அர்ஜெண்டினாவின் முன்கள வீரரான லயோனல் மெஸ்ஸிக்கும், நவீன கால்பந்து உலகின் சிறந்த டிபன்டரான நெதர்லாந்தின் விர்ஜில் வான் டிஜ்க்கும் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இந்த ஆட்டமானது கத்தார் உலகக் கோப்பையில் இளம் பயிற்சியாளருக்கும், அதிக வயதான பயிற்சியாளருக்கும் இடையிலான மோதலாகவும் அமைந்துள்ளது. அர்ஜெண்டினாவின் 44 வயதான பயிற்சியாளர் லயோனல் ஸ்காலோனிக்கு இது பெரிய அளவிலான முதல் போட்டியாகும். இதனால் அவர், தந்திரமான 71 வயதான நெதர்லாந்தின் பயிற்சியாளர் லூயிஸ் வான் ஹாலை விட மேம்பட்ட வகையில் சிந்திக்க வேண்டும்.
கத்தார் உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணி லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்தது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவை தோற்கடித்தது. முன்கள வீரரான மெம்பிஸ் டிபே, விங்கரான காக்போ ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில் காக்போ 3 கோல்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார்.
அர்ஜெண்டினா அணி, கத்தார் உலகக் கோப்பையை அதிர்ச்சி தோல்வியுடன் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் வீழ்ந்த போதிலும் அதன் பின்னர் மீண்டெழுந்து அடுத்தடுத்து இரு வெற்றிகளை குவித்து லீக் சுற்றில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் லயோனல்மெஸ்ஸியின் சாதுர்யமான ஆட்டத்தினால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினாஅணி.
நெதர்லாந்து பயிற்சியாளர் வான் ஹால் கூறும்போது, “மெஸ்ஸி மிகவும் ஆபத்தான படைப்பாற்றல் வீரர், கோல் அடிக்கவும், கோல் அடிப்பதற்கான நிறைய வாய்ப்புகளை உருவாக்கவும் அவரால் முடியும். ஆனால் அர்ஜெண்டினா அணி தங்கள் வசத்தில் உள்ள பந்தை இழக்கும் போது மெஸ்ஸியின் பங்களிப்பு அதிகம் இல்லாமல் உள்ளது. இதுவே எங்களுக்கான வாய்ப்புகளை கொடுக்கும்” என்றார்.
இன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதலாவது கால் இறுதியில் பிரேசில் -குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிரேசில் அணியில் காயத்தில் இருந்து மீண்டு கடந்த ஆட்டத்தில் ஆடிய நட்சத்திர வீரர் நெய்மார் நல்ல நிலையில் இருக்கிறார். முந்தைய ஆட்டத்தில் ஒரு கோல் அடித்த நெய்மார் இன்னும் ஒரு கோல் அடித்தால் சர்வதேச போட்டியில் பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்த ஜாம்பவான் பீலேவின் (92 ஆட்டங்களில் 77 கோல்) சாதனையை சமன் செய்வார்.