பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப் படுகிறது.
பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. கடந்த 2021 செப்டம்பர் முதல் கிமோ தெரபி சிகிச்சை எடுத்து வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 30ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரி க்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் உள்ள பீலேவின் உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. ரசிகர்கள், பொதுமக்கள் 24 மணி நேரம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கானோர் பெல் மிரோ ஸ்டேடியத்தில் குவிந்தனர். ஒருவர் ஒருவராக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் பீலேவின் உடல் அடங்கிய சவப்பெட்டி இன்று அங்குள்ள தெருக்களின் வழியாக எடுத்து செல்லப்பட்டு இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.