கார்களின் இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர்களை அழித்து விட்டு குட்கா கடத்திய கும்பல்: 550 கிலோ சிக்கியது
gudka gang arrested in chennai thirumangalam
சென்னை திருமங்கலத்தில் கார்களின் இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர்களை அழித்து விட்டு குட்கா கடத்திய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 550 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் drive against drug என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. 12 காவல் மாவட்ட துணைக்கமிஷனர்கள் மேற்பார்வையில் தனிப்படைகள் செயல்பட்டு வருகின்றனர். தங்களுக்கு வரும் ரகசிய தகவல்கள் மற்றும் வாகன சோதனை நடத்தி குட்கா மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்கின்றனர். சென்னை நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வாரந்தோறும் குறைந்த பட்சம் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அன்பு, சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவப்பிரசாத் மேற்பார்வையில் அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் குட்கா பதுக்கல் பேர்வழிகளை கண்காணித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
அதன் தொடர்ச்சியாக சென்னை, திருமங்கலம் போலீசார் நேற்று காலை 7 மணியளவில் திருமங்கலம் டெம்பிள் ஸ்கூல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த செவ்ரோலட் மற்றும் சான்ட்ரோ, வோர்ல்ட்ஸ் வோகன் கார்களை மடக்கி நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது வாகனத்துக்குள் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில் கார்களுக்குள் போலீசார் சோதனை நடத்தியபோது உள்ளே குட்கா போதைப் பாக்குகள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனையடுத்து கார்களுக்குள் இருந்த 240 கிலோ குட்கா, கூல் லிப் 112 கிலோ, விமல் 102 கிலோ, புகையிலை 18 கிலே ரெமோ 55 கிலோ என மொத்தம் 550 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தி வநத இரண்டு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் குட்காவை கடத்தி வந்த தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 39), சென்னை படப்பையைச் சேர்ந்த மாரி செல்வன் (27), சுகுமார் (23) அந்தோணி பாஸ்கர் (23), குன்றத்தூரைச் சேர்ந்த குமார் (36), கார்த்திக் (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் இன்ஜின் நம்பர், சேசிஸ் பதிவெண்களை கடத்தல் ஆசாமிகள் வெல்டிங் மூலம் அழித்துள்ளது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.