வேலூர் அருகே காரில் கொண்டு வரப்பட்ட ஆவணங்கள் இல்லாத ரூ. 10 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்து அது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள 7 சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு பள்ளிகொண்டா போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு 4 பேர் கும்பல் பொருட்களை ஏற்றி கொண்டிருந்தனர். இதனைக் கண்ட போலீசார் அங்கிருந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்யப்பட்ட பண்டல்களை காரில் இருந்து லாரிக்கு மாற்றியது தெரிய வந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்த போது அதில் கட்டு கட்டாக ரூ. 10 கோடி பணம் இருப்பது தெரியவந்தது. பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமாக இருக்கலாம் என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.