கானத்தூரில் டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் துப்பு துலக்கிய 125 சிசிடிவி கேமரா காட்சிகள்
சென்னை, கானத்தூர், ஈசிஆர் ரோட்டில் டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கும்பலை 125 சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் தனிப்படை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டுள்ளனர்.
டில்லியைச் சேர்ந்த நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அப்பர் ஜிண்டால். சென்னை, கானத்தூர், கிழக்கு கடற்கரைச் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது வீட்டின் பூட்டை நள்ளிரவில் உடைத்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்த தங்க, வைர நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். அது தொடர்பாக கானத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ்தங்கையா மேற்பார்வையில் கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ நடந்த வீட்டுக்குள் சிசிடிவி கேமரா எதுவும் இல்லை. இதனால் இந்த கொள்ளை வழக்கு போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்தது.
இந்த வழக்கில் துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையா நேரடியாக விசாரணையில் களம் இறங்கினார். கொள்ளை நடந்த வீட்டுக்கு வெளியே மற்றும் கிழக்குக்கடற்கரை தொடங்கி, கேளம்பாக்கம் முதல் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு ஆட்டோ ஒன்று செல்வது தெரியவந்தது. ஆட்டோவின் பதிவெண் மூலம் அது சென்ற வழித் தடங்களில் உள்ள சுமார் 125 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் பயணம் செய்த நபர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு செல்வது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 2 மாதங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் திருச்சியைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அதனையடுத்து திருச்சி முசிறியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26), திருச்சி உறையூறைச் சேர்ந்த சங்கர், வீரமுத்து ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை திறமையாக துப்பு துலக்கிய துணை கமிஷனர் ஜோஷ்தங்கையா மற்றும் கானத்தூர் போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.