இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்றமைக்காக அர்ஜுனா விருதுபெற்ற ஜெ.ஜெர்லின் அனிகாவை பாராட்டி கல்லூரி நிர்வாகம் சார்பாக ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார். மேலும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வி.ரேவதி, தேசிய அளவில் போல் வால்ட் போட்டியில் பரிசு வென்ற பி.ரோஸி மீனா ஆகியோர்களையும் பாராட்டி கேடயம் வழங்கினார்.
இவ்விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலம் இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்தி சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை ஊக்குவித்திடும் வகையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் திட்டங்களை தொடர்ந்து துரிதமாக செயல்படுத்தி வருகின்றோம். ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டி, உலக ஸ்குவாஷ் போட்டி போன்ற போட்டிகள் சென்னையில் நடத்தப்பட உள்ளன.
மதுரை லேடி டோக் கல்லூரி கடந்த 75 வருடங்களாக எண்ணற்ற பெண் குழந்தைகளின் உயர்கல்வி பெற்று பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு துறையிலும் சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக, பொருளாதாரம் பயிலும் மாணவி ஜெ.ஜெர்லின் அனிகா, 2022 ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்துள்ளது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும்.
அதேபோல, பி.ரோஸி மீனா, போல்வால்ட் போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்றுள்ளார். வி.ரேவதி, இந்திய தடகள அணியில் இடம்பெற்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். இவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவர்களது பயிற்சியாளர்கள், ஊக்கப்படுத்திய பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் வெற்றி எண்ணற்ற பெண் குழந்தைகளுக்கும், மகளிருக்கும் ஊக்கமளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. அவர்களைப் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.