காணாமல் போன வாலிபரின் உடல் கிணற்றில் எலும்புக்கூடாக மீட்பு: கொலை செய்த ரவுடி பரபரப்பு வாக்குமூலம்
29 years old male person murder in kunrathur body rescued from wel
சென்னை மறைமலை நகரில் காணாமல் போன வாலிபரின் உடலை போலீசார் குன்றத்தூர் கிணற்றில் எலும்புக்கூடாக மீட்டனர். முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கைதான ரவுடி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, தாம்பரம் அடுத்த எருமையூரைச் சேர்ந்தவர் வீக் என்கிற பிரகாஷ் (வயது 29). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் வந்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு அவரை தேடி வந்தனர். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் துணைக்கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் மறைமலை நகர் போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் திருடிவாக்கத்தைச் சேர்ந்த கருப்பு என்கிற தமிழ் அழகு (24) என்ற ரவுடிக்கு பிரகாஷ் காணாமல் போனதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து தமிழ் அழகுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது காணாமல் போன பிரகாஷை முன்விரோதம் காரணமாக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக அழகு பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். திருமுடிவாக்கம் 400 அடி வெளிவட்ட சாலையில் சுடுகாடு சந்திப்பு அருகே உள்ள தம்பிரான் என்பவரின் விவசாய கிணற்றில் பிரகாஷின் உடலை தூக்கி வீசியது தெரியவந்தது. அதனையடுத்து மறைமலை நகர் போலீசார் கிணற்றில் வீசப்பட்ட உடலை இன்று 25.08.22 காலை 11.45 மணியளவில் குன்றத்தூர் வட்டாட்சியர் கல்யாணசுந்தரம் முன்னிலையில் மீட்டனர். கிணற்றில் இருந்து பிரேதம் சாக்கு பையில் கட்டிய நிலையில் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டது. பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் குழுவினர் குன்றத்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தினர். பின்பு எலும்புக் கூடுகளை நல்லடக்கம் செய்ய இறந்தவரின் தாயார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பிரகாஷை கொலை செய்த தமிழ் அழகுவை கைது செய்த போலீசார் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.