காணாமல் போன 13 வயது சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உதவிய சூளைமேடு காவல் நிலைய தலைமைக் காவலர் மற்றும் தலை மறைவு சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்த காவல் குழுவினர் ஆகியோரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகரில் சிறப்பாக பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அதிகாரிகளை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி வருகிறார். அந்த வகை யில் சென்னை சூளைமேட்டில் காணாமல் போன 13 வயது சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உதவிய சூளைமேடு காவல் நிலைய தலைமைக் காவலர் மற்றும் ரவுடியை கைது செய்த காவல் குழுவினருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
குமரன் நகர் பகுதியில் நள்ளிரவில் காணமல் போன
13 வயது சிறுவன் சுமார் 1 மணி நேரத்தில் மீட்பு
சென்னை, ஜாபர்கான்பேட்டையில் வசித்து வரும் 13 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் 17.01.2023 அன்று வீட்டினருகில் காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு இரவு சுமார் 11.30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது சிறுவனின் தந்தை ஏன் இவ்வளவு நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறாய் என சத்தம் போட்டுள்ளார். சில நிமிடங்களில் மேற்படி சிறுவன் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றதால், சிறுவனை காணவில்லை என சிறுவனின் பெற்றோர் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடனே போலீசார் காணாமல் போன சிறுவனின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்து சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் சூளைமேடு காவல் நிலைய ஜிப்சி ரோந்து வாகன தலைமைக் காவலர் சுரேஷ் என்பவர் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் (18.01.2023 அதிகாலை) அரும்பாக்கம், மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தனியாக நடந்து சென்ற ஒரு சிறுவனை நிறுத்தி விசாரித்தார். அப்போது, சிறுவன் சரியாக பதில் கூறாத நிலையில், தீவிர விசாரணை செய்ததில், பிடிபட்ட சிறுவன் குமரன் நகர் காவல் நிலைய எல்லையில் காணாமல் போன சிறுவன் என தெரியவந்தது. உடனே, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, சிறுவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று, குழந்தைகள் நல அமைப்பு அலுவலர்களை வரவழைத்து, சிறுவனுக்கு ஆலோசனைகள் வழங்கி, சிறுவனின் பெற்றோரை வரவழைத்து, பெற்றோருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, சிறுவனை அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
கொலைமுயற்சி வழக்கில் தலைமறைவாக
இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது
சென்னை, ஜாபர்கான்பேட்டை பகுதியில் வசித்து வரும் விஜய், 24 என்பவரிடம் அவரது நண்பர்கள் முரளி, ராஜேஷ் மற்றும் சசி ஆகியோர் கடன் வாங்கியிருந்த நிலையில், 15.12.2022 அன்று இரவு சுமார் 10 மணியளவில், கே.கே.நகர், அம்பேத்கர் காலனியிலுள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சென்றபோது, அங்கிருந்த நண்பர்கள் முரளி, ராஜேஷ் மற்றும் சசி ஆகியோர் விஜயிடம் தகராறு செய்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து விஜய் கொடுத்த புகாரின்பேரில் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட கேகே நகரைச் சேர்ந்த முரளி, 32 என்பவரை கடந்த 27.12.2022 அன்று கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் (16.01.2023) மாலை சென்னை, மெரினா, காமராஜர் சாலையில் பணியில் இருந்த2 அண்ணாசாலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் திருவல்லிகேணி காவல் நிலைய முதல் நிலைக்காவலர்கள் சிவகுமார் மற்றும் மணிமுத்து ஆகியோர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். மேலும் விசாரணையில் மேற்படி நபரின் பெயர் ராஜேஷ் (எ) புளிமூட்டை ராஜேஷ் என்பதும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய எல்லையில் கடந்த 15.12.2022 அன்று நடந்த கொலைமுயற்சி வழக்கில் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது.
அதன்பேரில் காவல் குழுவினர் பிடிபட்ட ராஜேஷ் (எ) புளிமூட்டை ராஜேஷ் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ஏற்கனவே 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளது. கைது செய்யப்பட்ட எதிரி ராஜேஷ் (எ) புளிமூட்டை ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக் கப்பட்டார். மேற்படி நள்ளிரவு காணாமல் போன சிறுவனை சுமார் 1 மணி நேரத்தில் கண்டு பிடித்து, பெற்றோர் வசம் ஒப்படைக்க உதவிய F-5 சூளைமேடு காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு/தலைமைக் காவலர் மற்றும் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடித்த காவல் குழுவினர் ஆகியோரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் வரவழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.