Take a fresh look at your lifestyle.

காஞ்சிபுரம் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

68

தமிழகத்தில் கடந்த 8 மாவட்டங்களில் ரூ. 310.92 கோடி மதிப்பில் 9 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 6 ரயில்வே பாலங்கள், ஆற்றுப்பாலம், பல்வழிச்சாலை மேம்பாலம் உள்பட மொத்தம் 9 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, மதுரை, நெல்லையில் புதிய பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகரத்தை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பது பொன்னேரி கரை சாலை ஆகும். இந்த சாலையின் குறுக்கே ரெயில்வே கேட் அமைந்துள்ளது. ரெயில் போக்குவரத்து காரணமாக சாலையில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்களும் மருத்துவமனைக்கு வந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் ரெயில் பாதையை கடந்து செல்லும் வகையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் நகர மக்கள் நீண்ட நாட்களாக அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

காஞ்சிபுரம் நகர மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2017-ம் ஆண்டு 59.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மூலம் 66 தூண்களும், 70 தளங்களும் கொண்டு 800 மீட்டர் நீளத்திற்கு ரெயில் பாதையின் குறுக்கே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் காஞ்சிபுரம் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மேம்பாலத்தின் மூலம் வாகன ஓட்டிகள் விரைவாக செல்ல முடியும்.