Take a fresh look at your lifestyle.

காங்கிரஸ் கோஷ்டி பூசல்: கேஎஸ் அழகிரி மீது புகார் அளிக்க முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி செல்ல திட்டம்

101

சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது. சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரியுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், சட்டபேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இவர்கள் அனைவரும் கே.எஸ். அழகிரியுடன் ஒன்றாக கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

பின்னர் அனைவரும் தனியாக சென்று இந்திரா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் தனியார் ஓட்டலிலும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது கே.எஸ். அழகிரிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றி இந்த தலைவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் மோதல் முற்றியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியில் நடைபெற்று வரும் மோதல் சம்பவத்தை டெல்லி தலைமையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நிலையில் கே.எஸ். அழகிரிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு செயல்படும் எதிரணி தலைவர்கள் நாளை டெல்லி சென்று கே.எஸ்.அழகிரி மீது புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளனர். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடமும் கே.எஸ். அழகிரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூற உள்ளனர்.