சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லைகளில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் காவல் ஆணையரக எல்லைகளில் கஞ்சா விற்பனையை அறவே ஒழிக்கும் பொருட்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் தாம்பரம் மதுவிலக்கு உதவிக் கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சாலினி, ரவிக்குமார், சரவணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று குன்றத்தூர், மாங்காடு செல்லும் சாலையில் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகில் மதன் (21) என்ற நபரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் 5 கிராம் எடை கொண்ட 40 (200 கிராம் கஞ்சா) பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவன் அளித்த தகவலின் பேரில் அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்து 1 கிலோ கஞ்சா சிக்கியது. கல்லூரி மாணவர்கள், கூலி தொழிலாளர்களுக்கு கஞ்சாவை ரெகுலராக சப்ளை செய்வது தெரியவந்தது. அதனையடுத்து மதனை குன்றத்தூர் போலீசார் மூலம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதே போல பீர்க்கங்கரணை ரோந்து தலைமை காவலர் பூமிநாதன், முதல்நிலை காவலர் அருணகிரி ஆகியோர் பெருங்களத்தூர் சீனிவாசா நகர் பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக பைக்கை தள்ளிக் கொண்டு வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களது பைக்கை சோதனையிட்டதில் சீட்டுக்கடியில் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இருவரும் அங்குள்ள சீனிவாசா நகர், அப்பர் தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். ஒருவர் பெயர் மணீஷ்ராஜன் (22), மற்றொருவர் மணீஷ் (23) என்றும் அவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்த வர்கள் என்றும் கானத்தூர் கடல் சார் பல்கலைகழகத்தில் பிடெக் படிப்பதாகவும் தெரிவித் தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது அங்கு 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா விற்பவர்களை கைது செய்த கூடுவாஞ்சேரி மதுவிலக்கு ஆய்வாளரின் தனிப்படையினர் மற்றும் பீர்கங்கரணை ரோந்து தலைமை காவலர் பூமிநாதன் மற்றும் காவலர் அருணகிரி ஆகியோரையும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.