கர்நாடகத்தில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக கர்நாடக எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தி உஷார் நிலையில் இருக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். ஆட்டோவில் பயணம் செய்த நபர் கோவையில் சிம்கார்டு வாங்கிய தாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம், மங்களூருவில் நேற்று மாலை சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் திடீரென குண்டு வெடித்து. சிறிது நேரத்தில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்த பயணி பலத்த காயம் அடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது அதற்குள் குக்கர் ஒன்று எடுக்கப்பட்டது. குக்கருக்குள் வெடிபொருள் அடைக்கப்பட்டிருந்ததால் அது வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது குறித்து அதிர்ச்சித் தகவல் ஒன்றை கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் சமூக வலைத்தளங்களில் வெளியி ட்டுள்ளார். அந்த பதிவில் இந்தச் சம்பவம் விபத்தாக நடைபெறவில்லை மாறாக திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம், குறிப்பாக இந்த கும்பல் பயங்கரவாத தாக்குதலை கட்டவிழ்த்து விட திட்டம் தீட்டி உள்ளனர் என்று குறிப் பிட்டுள்ளார்.
அந்த ஆட்டோவில் பயணித்த பயணி பயன்படுத்திய அடையாள அட்டைகள் அனைத்தும் போலி என தெரிய வந்துள்ளது. மேலும் அந்த பயணி பயன்படுத்தி வந்த சிம்கார்டு கோவையில் இருந்து வாங்கி இருப்பதாக கர்நாடக காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாடு மாநில எல்லை பகுதிகளில் தொடர் வாகன தணிக்கை சோதனையை மேற்கொண்டும் பாதுகாப்பையும் அதிகரிக்க கூறியும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனையடுத்து கர்நாடக மாநில எல்லைகளான ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.