Take a fresh look at your lifestyle.

கமிஷனர் சங்கர்ஜிவாலின் 3 நாள் அதிரடி: பாண்டு பத்திரத்தில் கையெழுத்திட்ட 28 குற்றவாளிகள்

chennai police Drive Against Rowdy Elements and tobaco products

97

சென்னை நகரில் கடந்த 3 நாட்களில் போலீசார் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் நன்னடத்தை பாண்டு பத்திரத்தில் 28 குற்றவாளிகள் கையெழுத்திட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 3 நாட்கள் குற்றப் பின்னணி நபர்கள், குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த குடியிருப்பு நலச்சங்கத்தினருடன் கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

கமிஷனர் சங்கர்ஜிவால் மேற்கொண்ட பல்வேறு அதிரடிகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements (DARE), குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை ஒழிக்க Drive Against Banned Tobacco Prodcuts (DABToP), போதை பொருட்களை ஒழிக்க Drive Against Drugs (DAD) உள்பட பல சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

* 3 நாள் நடவடிக்கையில் 28 குற்றவாளிகள் சுற்றிவளைப்பு

கடந்த 01.07.2022 முதல் 03.07.2022 வரையிலான 3 நாட்கள் சென்னை பெருநகரில், மேற்படி குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் நன்னடத்தை பிணைப் பத்திரம் எழுதி கொடுத்த 529 குற்றப் பின்னணி நபர்களை (HS Rowdy Elements) கண்காணித்தும், நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் 28 குற்றப் பின்னணி நபர்கள் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர். அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

* குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை

இதே போல, கடந்த 01.07.2022 அன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற சிறப்பு சோதனையில் (DABToP), பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அது தொடர்பாக 4 நபர்கள் கைது செய்யப்பட்டு, 15 சிகரெட் பாக்கெட்டுகள், 500 கிராம் குட்கா புகையிலை பாக்கெட்டுகளும், இதர இடங்களில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 நபர்கள் கைது செய்யப்பட்டு, 3 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரூ.4,800- பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் அன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு சோதனையில், குட்கா புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 19 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 15 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ.4,800/- பறிமுதல் செய்யப்பட்டது.

* குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் கலந்தாய்வு

மேலும் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் அவ்வப்போது தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நகர்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் (Residents Welfare Association – RWA) கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, 03.07.2022 அன்று, உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர், 360 குடியிருப்பு நலச்சங்கத்தினருடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கலந்தாய்வில் 3,388 நபர்கள் கலந்து கொண்டு காவல்துறையினரின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்து பயனடைந்தனர். மேலும், சென்னை பெருநகரில் உள்ள 65 குடிசைப்பகுதிகளில், காவல் குழுவினர் மூலம் கலந்தாய்வுகள் மேற்கொண்டு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

*சிறப்பு இரவு வாகனத் தணிக்கைகள்

கடந்த 01.07.2022 முதல் 03.07.2022 வரையிலான 3 நாட்கள் இரவு சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு, 13,650 வாகனங்களை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்தது தொடர்பாக 26 வழக்குகளும், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 15 வழக்குகளும், ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்தது தொடர்பாக 300 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை

ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் எச்சரித்துள்ளார்.